பொதுத்தேர்தலுக்குமுன் பினாங்கு பிகேஆர் ‘தவளை’ வேட்டை

பினாங்கு பிகேஆர், 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ‘அரசியல் தவளைகள்’ இடம்பெற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

கட்சி கடுமையான தேர்வுமுறைகளைக் பின்பற்றி அப்படிப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட முயன்று வருவதாக மாநில பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான் கூறினார்.

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளைக் கட்சியின் வேட்பாளர் தேர்வுக்குழு பட்டியல் போட்டு வைத்திருப்பதாக மாநில துணை அமைச்சருமான மன்சூர் கூறினார்.

“நிபுணர்களை, வெற்றிபெறக்கூடியவர்களை, நம்பத்தக்கவர்களை, தொகுதிமக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர்களையே வேட்பாளர்களாக்க முடிவு செய்துள்ளோம்”. நேற்று புக்கிட் மெர்டாஜாம்,குவார் பெராஹு-வில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் மன்சூர் இத்தகவலைத் தெரிவித்தார்.அந்நிகழ்வை அவரும் மாற்றரசுக்கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

“அவர்களின் பின்னணி தீர ஆராயப்படும். கட்சிக்கு அவர்களின் பங்களிப்பு,எவ்வளவு காலமாக உறுப்பினராக இருக்கிறார்கள், அவர்களுக்குள்ள ஆதரவு போன்றவையும் கருத்தில்கொள்ளப்படும்”, என்றாரவர்.

2010-இலிருந்து கட்சித்தாவலில் பிகேஆர் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறது.அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் 31-இலிருந்து 24ஆகக் குறைந்தது.சட்டமன்ற உறுப்பினரில் சிலரும் கட்சி மாறிச்சென்றுள்ளனர்.

பேராக்கில் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் டிஏபி-யைச் சேர்ந்த ஒருவரும் கட்சியிலிருந்து விலகி பிஎன்னுக்கு ஆதரவு தெரிவித்ததால் அங்கு பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளருக்குப் பஞ்சமில்லை

வேட்பாளர் தகுதி கொண்ட மிகப்பலர் கட்சியில் இருப்பதாகக் கூறிய மன்சூர் இவர்களில் எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது என்றார்.

பினாங்கில் பிகேஆர் 16இடங்களிலும் டிஏபி 19 இடங்களிலும் பாஸ் ஐந்து இடங்களிலும் போட்டியிடும்.

2008 அரசியல் சுனாமியில் பிகேஆர் ஒன்பது இடங்களில் வென்றது, டிஏபி போட்டியிட்ட 19இடங்களையும் கைப்பற்றியது, பாஸ் ஓரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.

எதிர்வரும் தேர்தலில் கட்சிகள் கூடுதல் இடங்களைப் பெற முயன்றாலும் தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை இருக்கின்ற நிலையே தொடரும் என்று தெரிகிறது.

டிஏபி அதன் வேட்பாளர்களில் மலாய்க்காரர்களைக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.அதேபோல் பிகேஆரில் சீன வேட்பாளர்களுக்குக் கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுமுகங்கள்

வேட்பாளர் பட்டியலில் ஆச்சரியங்கள், மாற்றங்கள் உண்டா என்று வினவப்பட்டதற்கு, வேட்பாளர்களில் 30விழுக்காட்டினர் அதாவது ஐவர் “புதுமுகங்கள்” என்று மன்சூர் குறிப்பிட்டார்.

ஒரே வேட்பாளர் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் போட்டியிடுவாரா என்று கேட்கப்பட்டதற்கு அதை அந்தந்தக் கட்சியே முடிவு செய்யும் என்றார்.

அவர் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் போட்டியிடும் வாய்ப்புண்டா என்றும் வினவப்பட்டது.

“அதைக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் சரி என்றால் அதற்கு நான் தயார்”, என்றார்.