வழக்குரைஞர் மன்றத்துக்கு ‘மாற்று அமைப்பு’ செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்

வழக்குரைஞர் மன்றத்துக்கு ‘மாற்று அமைப்பு’ ஒன்று அடுத்த மாதம் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுவதாக அதனை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள வழக்குரைஞர் நோர்டின் யூசோப் கூறியுள்ளார்.

அந்த புதிய அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு போதுமான ஆதரவைத் தாம் திரட்டி விட்டதாக நோர்டின் கூறிக் கொண்டார் என தி ஸ்டார் நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துக் அஜிஸுடன் பேசியுள்ளஓம். அதன் பதிவை அதிகாரப்பூர்வமாக மேற்கொள்வதற்கு சங்கப் பதிவதிகாரியுடனும் தொடர்பு கொண்டுள்ளோம்,” என அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

மேல் விவரங்களைத் தர மறுத்து விட்ட நோர்டின், அதன் உறுப்பியம் அமைச்சர்கள், நீதிபதிகள், கல்வியாளர்கள், தொழில் செய்யாத வழக்குரைஞர்கள் ஆகியோருக்கும் திறந்து விடப்படும் என்று மட்டும் கூறினார்.

பெர்சே 3.0 பேரணி முடிந்த பின்னர் நிகழ்ந்த வன்செயல்களை வழக்குரைஞர் மன்றம் தனது சிறப்புப் பொதுக் கூட்டத்தில் விவாதித்த பின்னர் மாற்று அமைப்பு ஒன்றை தோற்றுவிக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

மே 11ம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில் மொத்தம் 939 தீர்மானங்கள் 939க்கு 16 வாக்குகள் என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டன. பேரணியின் போது நிகழ்ந்த போலீஸ் வன்முறைகளை அந்தத் தீர்மானங்கள் கண்டித்தன. அந்தத் தீர்மானங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பல உறுப்பினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தின.

வழக்குரைஞர் மன்றம் மிரட்டுவதாகவும் தனது விருப்பம் போல் செயல்படுவதாகவும் கூறிய நோர்டின் மாற்று அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான காரணங்களில் அவையும் அடங்கும் எனத் தெரிவித்தார்.

“நான் அவர்களுடைய கோமாளித்தனங்களைக் கண்டு வெறுப்படைந்துள்ளேன். களைப்படைந்துள்ளேன். அவர்களுடைய தீய தந்திரங்களை நான் விரைவில் அம்பலப்படுத்தப் போகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.