கெடா மசீச தலைவர் சோங் இட் சியு, கட்சியின் உயர்தலைமையுடன் மாறுபட்டு பாஸின் ஹூடுட் சட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துக்கொண்டுள்ளார்.
“அந்த(ஹூடுட்)ச் சட்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்பது முஸ்லிம்-அல்லாதாருக்கு ஒரு பிரச்னையே அல்ல.டிஏபியும் அதை எதிர்க்கக்கூடாது”,என்றவர் கூறியதாக இன்றைய சினார் ஹராபான் செய்தி கூறியது.
ஹூடுட் சட்டம் முஸ்லிம்-அல்லாதார்மீது பயன்படுத்த மாட்டாது என்பதே அதைத் தாம் ஆதரிப்பதற்கான காரணம் என்றவர் விளக்கம் அளித்தார்.
ஹூடுட் சட்டத்தை டிஏபி கடுமையாக எதிர்ப்பதால், பாஸ் பக்காத்தான் ரக்யாட்டில் தொடர்ந்து இருப்பது பற்றி மறு பரிசீலனை செய்து அதிலிருந்து வெளியேறி அதனுடன் ஒத்துப்போகும் பிஎன்னுடன் சேர்வதே நல்லது என்றும் அவர் குறிப்பிட்டதாக அச்செய்தி கூறிற்று.
“அம்னோவும் பாஸும் ஒன்று சேர்வது மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது என்றே நினைக்கிறேன்”,என்றவர் கூறினார்.
சிலாங்கூர் மசீச அதன் ஆண்டுக்கூட்டத்தில், சிலாங்கூரை பிஎன் கைப்பற்றினால் இஸ்லாமிய அரசு அமைவதை அக்கட்சி தடைசெய்யும் என்று உறுதிகூறியதாக தகவல் வெளிவந்து மூன்று நாள் ஆகும் வேளையில் கெடா மசீச இவ்வாறு கருத்துரைத்துள்ளது.
சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம், சிலாங்கூரும் மற்ற மாநிலங்களும் பிஎன் ஆட்சியின்கீழ் வந்தால் அவை ஒரு நாளும் இஸ்லாமிய அரசுகளாக மாறாது என்றார்.