அமைச்சின் மெர்தேக்கா சின்னத்தைக் கைவிடுவதாக தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவித்து ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில் கடந்த வாரம் தொடக்கம் முக்கிய நாளேடுகளில் புதிய மெர்தேக்கா சின்னம் ஒன்று காணப்படுகின்றது.
புதிய சின்னத்தில் முன்னைய சின்னத்தில் இருந்ததைப் போன்ற அதே அம்சங்கள் உள்ளன. என்றாலும் வரைபடங்கள் முன்னைக் காட்டிலும் தெளிவாக உள்ளன.
உடனடியாகக் கிடைக்கக் கூடிய எழுத்துருக்குகளைக் கொண்டு அவை தயாரிக்கப்பட்டுள்ளன.
பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆகிய நாளேடுகளில் கடந்த வாரத்திலிருந்து அந்தச் சின்னம் வெளியிடப்படுகின்றது. அதில் 55 என்ற எண் நீல நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றது. அதற்கு மேல் அலை போலச் செல்லும் சிவப்புக் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
அத்துடன் ஒரே மலேசியா சின்னமும் காணப்படுகின்றது. “Merdeka”, “Janji Ditepati” என்றும் எழுதப்பட்டுள்ளன.
என்றாலும் அந்தப் புதிய சின்னம் தகவல் அமைச்சின் அதிகாரத்துவ சின்னமா என்பது இன்னும் தெரியவில்லை. அது குறித்து அறிந்து கொள்ள ராயிஸுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தகவல் அமைச்சின் இணையத் தளத்தில் முதலில் வெளியிடப்பட்ட முன்னைய மெர்தேக்கா சுலோகத்தை நீக்கிய போது, அது அதிகாரத்துவ மெர்தேக்கா சின்னமாக ஒரு போதும் இருந்தது இல்லை என தேசிய நாள் கொண்டாட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் ராயிஸ் சொன்னார்.
இவ்வாண்டுக்கான கொண்டாட்டங்களின் போது கடந்த மூன்று ஆண்டுகளாக மெர்தேக்கா சின்னமாக பயன்படுத்தப்பட்ட ஒரே மலேசியா சுலோகம் இந்த ஆண்டுக்கான கொண்டாட்டங்களிலும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
பழைய சின்னத்தை வரைபட வடிவமைப்பாளர்கள் உட்பட பலர் கடுமையாகக் குறை கூறிய பின்னர் அது கைவிடப்பட்டது. அந்தச் சின்னம் சாதாரண, தரம் குறைந்த ஒருவருடைய வேலை என்றும் அவர்கள் வருணித்தனர்.