Himpunan Hijau-வுக்கு இடம் கொடுக்க ரவூப் மாவட்ட மன்றம் மறுப்பு

புக்கிட் கோமான் தங்கச் சுரங்கத்துக்கு எதிராக டாத்தாரான் ரவூப்பில் செப்டம்பர் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பு ஒன்று சமர்பித்திருந்த விண்ணப்பத்தை  ரவூப் மாவட்ட மன்றம் நிராகரித்துள்ளது.

ஆகஸ்ட் 17ம் தேதி தான் சமர்பித்த விண்ணப்பத்துக்கு இன்னொரு நடவடிக்கைக்காக டாத்தாரான் ரவூப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த மன்றம் பதில் அளித்துள்ளதாக சைனாய்ட் தடை நடவடிக்கைக் குழு ஒர் அறிக்கையில் தெரிவித்தது.

“அந்தப் பதில் மீது குழு மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது. அந்தத் தேதியை நிர்ணயிப்பதற்கு முன்னர் நாங்கள் சோதனை செய்த போது அன்றைய தினம் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது தெரிய வந்ததது,” என்று குழுத் தலைவர் வோங் ஹின் ஹுங் கூறினார்.

பொது வசதிகளை வரி செலுத்துவோர் பயன்படுத்துவதைத் தடுப்பதின் மூலம் மாவட்ட மன்றம் அவர்களுடைய உரிமைகளை மீறியுள்ளதாகவும் வோங் சொன்னார்.

“வெளிப்படையான போக்கையும் சீர்திருத்தங்களையும் மேம்படுத்தும் பிரதமரது முயற்சிகளுக்கும் அது பெருத்த அவமானமாகும்,” என்றார் அவர்.

பொதுமக்கள் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசமைப்பிலும் 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்திலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள பொது மக்கள் உரிமையை மன்றம் நிராகரித்துள்ளது என்று குழு வன்மையாக கண்டிப்பதாகவும் வோங் சொன்னார்.

மன்றத்தின் அறிவிப்புக் கடிதம் கிடைத்த அதே நாளன்று குழு பதில் அளித்து விட்டது. அதில் செப்டம்பர் 2ம் தேதி டாத்தாரான் ரவூப்பில் நடக்கும் நிகழ்ச்சி பற்றிய விவரங்களை குழு கோரியுள்ளதுடன் மன்றத்துடன் கலந்துரையாடல் நடத்தவும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரவூப்புக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புக்கிட் கோமானில் தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் சைனாய்ட் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அந்தக் குழு அமைக்கப்பட்டது.

சைனாய்ட் பயன்படுத்துவதால் தங்களுக்கு பல வகையான நோய்கள் ஏற்பட்டுள்ளதாக புக்கிட் கோமான் மக்கள் கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் அதனை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.