“அஸ்தியைப் பறித்துச் சென்றதாக” JAIPP மீது போலீஸ் புகார்

நோன்புப் பெருநாளின் முதல் நாளன்று சரியான ஆவணங்கள் ஏதுமில்லாமல் முஸ்லிம் என நம்பப்படும் மாது ஒருவருடைய அஸ்தியைப் பறித்துச் சென்றதாக JAIPP என்ற பினாங்கு இஸ்லாமிய விவகாரத்துறை மீது இந்துக்கள் குழு ஒன்று 18 போலீஸ் புகார்களைச் செய்துள்ளது.

அந்தப் புகார்களை நிபோங் திபால் போலீஸ் நிலையத்தில் அந்த மாதுவின் புதல்வர் எம் கமசந்திரனும் ( Kamasanthren )குடும்பத்தின் 17 உறவினர்களும் நண்பர்களும் சமர்பித்தனர்.

தகனம் செய்யப்பட்ட தமது தாயார் எம் நாகம்மாவின் அஸ்தியை எடுத்துக் கொள்ள JAIPP அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட பலர் விரும்புவதாக ஆகஸ்ட் 14ம் தேதி சுடலையிலிருந்து தமது குடும்பத்துக்குத் தகவல் கிடைத்ததாக கமசந்திரன் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சுடலையிலிருந்து பேசிய நபருடன் உரையாடிய தமது மாமா ஆர் ராஜா, JAIPP அதனைச் செய்வதற்கு குடும்பம் அனுமதிக்கப் போவதில்லை என தெளிவாக சொன்னதாக அவர் மேலும் கூறினார்.

JAIPP சட்ட ரீதியாக சென்றிருந்தால் தவிர தமது தாயாரின் அஸ்தியை எடுத்துக் கொள்ளும் சட்டப்பூர்வ அதிகாரம் அதன் அதிகாரிகளுக்கு இல்லை என அவர் வலியுறுத்தினார். தமது தாயாரின் அஸ்திக்கு குடும்பமே சட்டப்பூர்வ உரிமை கொண்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“JAIPP அதிகாரிகள் அந்த விஷயத்தைக் கட்டாயப்படுத்தி என் தாயாருடைய அஸ்தியை இறுதியில் எடுத்துக் கொண்டனர். உண்மையில் அவர்கள் அவரது அஸ்தியை எங்களிடமிருந்து திருடியுள்ளனர்,” என சுங்கை ஜாவியைச் சேர்ந்த 46 வயது கமசந்திரன் கூறினார்.

“என் தாயாரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மலேசியர்கள். கூட்டரசு அரசமைப்பும் மலேசிய சட்டங்களும் எங்கள் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.”

“தகனம் செய்யப்பட்ட உடலின் அஸ்தியைத் திருடும் நடவடிக்கை அப்பட்டமாக சட்ட விரோதமானது, கடுமையானது. சமயச் சுதந்திரம் மீதான 11வது பிரிவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைத் தெளிவாக மீறுவதாகும்”, என்றும் அவர் வலியுறுத்தினார்.

காலஞ்சென்றவர் இந்துவாக வாழ்ந்து மரணமடைந்தார்

அந்த விவகாரத்தை போலீஸ் விசாரிக்க வேண்டும் என விரும்பியதால் புகார் செய்துள்ளதாகவும் கமசந்திரன் சொன்னார். ஆகஸ்ட் 28ம் தேதி மூத்த புதல்வர் என்ற முறையில் தமது தாயாருக்கு இறுதி ஈமச் சடங்குகளைச் செய்வதற்கு உதவியாக JAIPP-உடனான பிரச்னை “சுமூகமாக” தீர்க்கப்பட வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரணமடைந்த 14 நாட்களுக்குப் பின்னர் கருமக்கிரியைகள் நடத்தப்பட வேண்டும். அதற்குப் பின்னர் அவரது அஸ்தி அருகிலுள்ள ஆறு ஒன்றில் வீசப்பட வேண்டும்.

பிர்யாம் தோட்டத்தைச் சேர்ந்த நாகம்மா ஆகஸ்ட் 14ம் தேதி காலமானார். அவரது சடலம் சுங்கை பாக்காப் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் இந்துவாக வாழ்ந்து இந்துவாக மரணமடைந்திருப்பதால் அவருக்கு இந்து சமய முறையில் ஈமச் சடங்குகளை நடத்த தாங்கள் ஆயத்தங்களைச் செய்ததாக குடும்பத்தினர் கூறினர்.

அவர் இறந்த பின்னர் அவரது வீட்டுக்குச் சென்ற JAIPP அதிகாரிகள்  முஸ்லிம் நல்லடக்கத்திற்காக அவரது உடலை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது.

“அந்த அதிகாரிகள் தங்களுடைய கோரிக்கைக்கு ஆதாரமாக ஆவணங்கள் எதனையும் காட்டாததால் சடலத்தைக் கொடுக்க குடும்பத்தினர் மறுத்து விட்டார்கள். ஆகவே இந்து முறைப்படி நாகம்மா பத்து பெராப்பிட் சுடலையில் தகனம் செய்யப்பட்டார்.”

சிவில் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு JAIPP-க்கு ஆலோசனை

சுடலைக்கு JAIPP அதிகாரிகளுடன் போலீசாரும் சென்றுள்ளதால் அந்தச் சம்பவம் அரசாங்க ஒப்புதலுடன் நிகழ்ந்துள்ளதைத் தெளிவாக காட்டுவதாக கமசந்திரனுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றிருந்த ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன் கூறினார்.

தகனம் செய்யப்பட்டவரின் அஸ்தியைத்  தங்களிடம் தருமாறு சுடலைக்கு உத்தரவிடும் அதிகாரத்தை எந்தச் சட்டம் அல்லது அதிகாரிகள் வழங்கினர் என அவர் வினவினார்.

கூட்டரசு அரசமைப்பின்படி தமது சமயத்தைப் பின்பற்றும் உரிமைகளுக்கும் தமது தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யும் உரிமைகளுக்கும் கமசந்திரனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து சமயத்தில் தமது பெற்றோர்களுக்கு ஒரு புதல்வர் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமைகளில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்ட கணேசன், JAIPP “விதி விலக்கு பெற்றது போல தன்மூப்பாக  செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

“தகனம் செய்யப்பட்டவரின் அஸ்தி  மீது தனக்கு உரிமை இருப்பதாக JAIPP கருதினால் அந்த விவகாரம் மீது தீர்வு காண்பதற்கு முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகளைப் பாதுகாக்கும் சிவில் நீதிமன்றங்களுக்கு அது செல்ல வேண்டும்.”

“ஷாரியா நீதிமன்றங்கள் தன்மூப்பாக வழங்கும் உத்தரவுகள் முஸ்லிம் அல்லாதாருக்கு பொருந்தாது. ஆகவே இது JAIPP மேற்கொண்ட திருட்டுச் சம்பவமாகிறது,” என அவர் மேலும் சொன்னார்.

JAIPP அல்லது மாநில முப்தி ஹசான் அகமட்-டின் கருத்துக்களைப் பெற மலேசியாகினி மேற்கோண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.