‘ஹுடுட்’ செய்தி மீது நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடா மசீச கோரிக்கை

‘MCA Kedah sokong hudud’ (கெடா மசீச ஹுடுட்டை ஆதரிக்கிறது) என்னும் தலைப்பில் நேற்று தான் வெளியிட்ட செய்திக்காக மலாய் நாளேடான சினார் ஹரியான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த மாநில மசீச தலைவர் சொங் இட் சியூ இன்று கோரியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசி வழி நடத்தப்பட்ட பேட்டியின் போது ஹுடுட் சட்டம் பற்றி எதுவும் கேட்கப்படாத வேளையில் இஸ்லாமியச் சட்டத்தை கெடா மசீச ஒப்புக் கொள்கிறது எனத் தாம் சொன்னதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டது மீது தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

“நான் ஏமாற்றமடைந்துள்ளேன். காரணம் என்னிடம் கேட்கப்பட்டதற்கு மாறாக அதில் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பேட்டியின் போது நிருபர் ஹுடுட் என்ற சொல்லைப் பயன்படுத்தியதை நான் செவிமடுக்கவே இல்லை,” என அவர் அலோர் ஸ்டாரில் நிருபர்களிடம் கூறினார்.

“மக்களுக்கு தகவல்களைப் பரப்பும் போது தொழில் ரீதியான கோட்பாடுகளைப் பின்பற்றுமாறு எல்லா நிருபர்களுக்கும் நினைவூட்டும் கடிதம் ஒன்றை தாம் விரைவில் அந்த பத்திரிக்கைக்கு அனுப்பப் போவதாகவும் சொங் குறிப்பிட்டார்.

“நான் அந்த நிருபர் மீதோ பத்திரிக்கை மீதோ சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. ஆனால் அந்தச் செய்தி மீது நாளேடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நான் கோருகிறேன்,” என்றார் அவர்.

-பெர்னாமா

 

TAGS: