பினாங்கில் பிரதமருடைய அற நிதி நன்கொடை நிகழ்வு ‘கடத்தல்’ எனக் கருதப்படுகின்றது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அற நிதி நன்கொடை நிகழ்வு ஒன்றுக்காக வரும் ஞாயிற்றுக் கிழமை பினாங்கிற்கு செல்கிறார்.

அந்த நிகழ்வு முதலில் மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூர் சீன மொழி நாளேடு ஒன்றின் ஆதரவுடன் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் பிரதமர் அந்த நிகழ்வை ‘கடத்தி விட்டார்’ என அங்கு கருதப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமை சீனப் பள்ளிக்கூடங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் ஸ்டெரெயிட்ஸ் கீ-யில் நடத்தப்படும் சைக்கிளோட்ட நிகழ்வில் நஜிப் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட பகுதியில் அதிகமாக விற்பனையாகும் குவோங் வா ஜிட் போ என்னும் சீன நாளேடு ஏற்பாடு செய்துள்ள அந்த நிகழ்வுக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ள நஜிப் முன் வந்ததாக சொல்லப்படுகிறது.

இப்போது அந்த நிகழ்வுக்கு 2011ம் ஆண்டு கல்விக்காக ஒரே மலேசியா அற நிதி ஒட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு மூலம் பினாங்கில் உள்ள 15 சீனப் பள்ளிகளுக்கு 15 மில்லியன் ரிங்கிட் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஜிப்பின் ஆதரவை, சீனர்களுக்கு உதவி செய்யும் நடவடிகையாகவோ அல்லது கல்வியை மேம்படுத்தும் புனிதமான முயற்சியாகவோ எல்லோரும் பார்க்கவில்லை.

கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எப்போதும் சீனர்களுடைய உள்ளத்தைத் தொடக் கூடிய அம்சங்களாகும்.

அந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக பல மாதங்களாக பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர் லிடியா ஒங், சம்பந்தப்பட்ட பத்திரிக்கையுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வந்தார் என பந்தாய் ஜெரெஜாக் சட்ட மன்ற உறுப்பினர் சிம் சி சின் கூறினார்.

ஆனால் பல வாரங்களுக்கு முன்பு அந்த நிகழ்வை கூட்டரசு அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு புத்ராஜெயாவிலிருந்து ஒங்-கிற்கு ‘உத்தரவு’ கிடைத்தது.

“ஆகவே சீனப் பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடைகளை வழங்க நஜிப் வாக்குறுதி அளித்ததால் மரியாதை நிமித்தம் மாநில அரசாங்கம் அந்த நிகழ்வை பிரதமர் துறையிடம் ஒப்படைத்தது,’ என சிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை அளிக்கும் அந்த நிகழ்வுக்கு ஆதரவு அளிப்பதை பிரதமரிடம் ஒப்படைக்க முதலமைச்சர் லிம் குவான் எங் பெருமனதோடு இசைந்தார் என அவர் குறிப்பிட்டார்.

சிம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவியாளரும் ஆவார்.

நஜிப் அந்த நிகழ்வைக் கடத்தி விட்டாரா என நிருபர்கள் கேட்ட போது மக்கள் நலனுக்காக கூட்டரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மாநில அரசு தயாராக இருப்பதாக லிம் அண்மையில் கூறினார்.

குவோங் வா ஜிட் போ பத்திரிக்கையின் இயக்குநர்களும் உடன் இருந்த அந்த நிருபர்கள் சந்திப்பில் நெருக்கப்பட்ட போது லிம் “நீங்கள் அவ்வாறு விளக்கம் (நிகழ்வை நஜிப் கடத்தியதாக) சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்,” எனச் சொன்னார்.

நஜிப் பினாங்கிற்கு அடிக்கடி வருகை அளிப்பது, புத்ராஜெயாவுக்கு அந்த மாநிலம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியுள்ளதாக வலியுறுத்திய லிம், “அவர் மேலும் அடிக்கடி இங்கு வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்,” என்றார்.

“அந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க பிரதமர் அலுவலகம் முன் வந்த போது  குவோங் வா ஜிட் போ சாதகமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் இருந்ததை நான் புரிந்து கொண்டேன்.”

என்றாலும் பிரதமருடைய கருணை உள்ளம், 2008ம் ஆண்டு தேர்தலில் மசீச-வையும் கெரக்கானையும் கை விட்ட உள்ளூர் சீன சமூக ஆதரவை மீண்டும் பெறுவதற்கே எனப் பார்க்கப்படுகிறது.

விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டுவதற்காக ‘இனிப்புக்களை’ வழங்கும் முயற்சியாகவே அது கருதப்படுகிறது.

பினாங்கு மக்களை முட்டாளாக்க முடியாது

நஜிப், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் போன்ற பிஎன் தலைவர்கள் வழங்கும் இனிப்புக்களில் பினாங்கு மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என்றும் “நடைமுறைக்கு ஏற்ப சிந்திக்கக் கூடியவர்கள்’ என்றும் பிகேஆர் பாயான் பாரு தொகுதித் தலைவருமான சிம் சொன்னார்.

“இத்தகைய பிரச்சாரம் இனிமேலும் எடுபடாது. 2004ம் ஆண்டு 2008ம் ஆண்டு தேர்தல்களின் போது பிஎன் தலைவர்கள் பல பள்ளிக்கூடங்களுக்கு நிதி அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை,” என்றார் அவர்.

“எங்களிடம் உள்ள வரம்புக்குட்பட்ட நிதியைக் கொண்டு நாங்கள் ஆண்டுதோறும் சீனப் பள்ளிகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட்டும் சமயப் பள்ளிகளுக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் 5 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கியிருக்கிறோம். ஆகவே யாருக்கு கல்வி மீது அதிக அக்கறை உள்ளது ?” என அவர் வினவினார்.

தேர்தல் நெருங்கும் போது மட்டும் பிஎன் தலைவர்கள் பினாங்கிற்கு அடிக்கடி வருவதை மாநில மக்கள் அறிவார்கள் என்றும் சிம் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்வார் இப்ராஹிமின் நாடாளுமன்றத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் நடந்த தேசிய நிலையிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப் கலந்து கொண்டார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் பினாங்கில் பல இடங்களுக்கு வருகை புரிந்தார்.

நிபோங் திபாலில் நிகழ்ந்த நோன்புப் பெரு நாள் திறந்த இல்ல உபசரிப்பில் அவர் பல்வேறு மேம்பாட்டு, கல்வித் திட்டங்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் வழங்கினார்.

பினாங்கு மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்த போதிலும் கூட்டரசு அரசாங்கம் அவர்களைக் கைவிடாது என்பதை உணர்த்துவதே அந்த இரு தலைவர்களுடைய நோக்கமாகும்.

“பிஎன் னுக்கு வாக்குகளைத் திரட்டுவதற்காக நஜிப்பும் முஹைடினும் போட்டி போட்டிக் கொண்டு செயல்படுகின்றனர்,” என சிம் புன்னகையுடன் கூறினார்.