லிட்டில் இந்தியா நடவடிக்கைக் குழுத் தலைவருக்கு ‘சுடுகாட்டிடமிருந்து’ கொலை மருட்டல்

கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுடுகாட்டு ரவி என தம்மை அழைத்துக் கொள்ளும் ஒரு மனிதரிடமிருந்து லிட்டில் இந்தியா நடவடிக்கைக் குழுத் தலைவர் எஸ் பக்தவத்சலத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் கொலை மருட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி பிற்பகல் மணி 12.30 வாக்கில் தமது கைத்தொலைபேசியில் அந்தச் சுடுகாடு அழைத்து தம்மை வெட்டப் போவதாகவும் தமது குடும்பத்தை நாசமாக்கப் போவதாகவும் மருட்டியதாக பக்தவத்சலம் கூறினார்.

“என் வீட்டுக்கு சவப் பெட்டியை அனுப்புவதாகவும் அவரைச் சோதனை செய்தால் என் வீட்டுக்கு வருவதாகவும் அந்த மனிதர் சொன்னார்,” என்றார் அவர்.

சொத்து விற்பனை முகவரான பக்தவத்சலம் அதே நாளன்று மாலை மணி 5.29 வாக்கில் ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த மருட்டல்கள் கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடினுடன்  தாம் நடத்திய கலந்துரையாடலுடன் தொடர்புடையது என்றும் அவர் சொன்னார்.

முன்பு பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் மாவட்டத் தலைமையகம் அமைந்திருந்த நிலத்துக்கு பொறுப்பான மேம்பாட்டாளரை நிருபர்களுக்கு ராஜா நோங் சிக் அறிமுகம் செய்த நிகழ்வு அதுவாகும்.

அந்த இடத்தில் முறையான மாவட்ட போலீஸ் நிலையத்துக்கு பதில் அங்கு போலீஸ் காவல் தளம் ( police beat base ) ஒன்றை அமைக்கும் ராஜா நோங் சிக்-கின் யோசனையை தாமும் மற்றும் பல அரசு சாரா அமைப்புக்களும் நிராகரித்து விட்டதால் சுடுகாட்டு ரவி தம்மை மருட்டுவதாகவும் பக்தவத்சலம் கூறினார்.

கொலை மருட்டலைத் தீர்த்துக் கொள்ள  10,000 ரிங்கிட் வெகுமதி 

ஆகஸ்ட் 22ம் தேதி அந்த சொத்து முகவர் இன்னொரு போலீஸ் புகாரைச் செய்தார். ஆகஸ்ட் 16ம் தேதி இரவு மணி 10.30 வாக்கில் சுடுகாடு தம்மை இரண்டாவது முறையாக அழைத்ததாகவும் தாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் போலீஸுக்குச் செல்லாமல் தமது ஆட்களுடன் ‘மேசை பேச்சு’  நடத்த பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு தம்மை எச்சரித்ததாகவும் அவர் அதில் கூறியுள்ளார். 

“என்னுடைய மரணத்துக்கு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதால் 10,000 ரிங்கிட் வெகுமதியுடன் என்னுடைய பாதுகாப்பு குறித்து விவாதிக்க,  மேசைப் பேச்சுக்கு யாராவது ஒருவரை அனுப்புமாறு அந்த மனிதர் என்னிடம் சொன்னார்.”

“போலீசில் புகார் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அந்த மனிதர் என்னிடம் கூறினார். போலீசும் அரசாங்கமும் அவருடையது என்றும் அந்த மனிதர் சொன்னார்,” என பக்தவத்சலம் பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த விவகாரத்தை கவனிக்கும் புலனாய்வு அதிகாரி அந்த மனிதரை நேரடியாகப் பிடிப்பதாக சூளுரைத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டடார்.

“அரசாங்கம் வேண்டுமானால் அவருடையதாக இருக்கலாம். நாங்கள் அவருடைய போலீஸ் அல்ல என அந்த அதிகாரி என்னிடம் சொன்னார்,” என்றும் பக்தவத்சலம் தெரிவித்தார்.

பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலைய நிலப் பேரம் கிடைத்துள்ள எல்லா ஆவணங்களையும் ஆதாரங்களையும் தாம் தொகுக்கப் போவதாக அந்த நிருபர்கள் சந்திப்பின் போது உடனிருந்த லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கூறினார்.

அவற்றை அடுத்த வாரம் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.