பிஎஸ்எம் மாதாந்திர செய்திமடல் வெளியிட அனுமதி

பார்டி சோசியலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) மாதாந்திர செய்திமடல் வெளியிட உரிமம் (பெர்மிட்) வழங்கப்பட்டிருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் கூறினார்.

நேற்று மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டபோது அப்போதுதான் உரிமம் கொடுக்க ஒப்புதல் வழங்கும் கடிதம் உள்துறை அமைச்சிடமிருந்து கிடைத்ததாக அவர் சொன்னார்.

செய்திமடலுக்கு உரிமம் கோரி பிஎஸ்எம் மே17-இல் மனு செய்துகொண்டது.

“மனு செய்வதில்கூட பலருக்கு நம்பிக்கை இல்லை.அது நிச்சயமாக புறம்தள்ளப்படும் என்றே நினைத்தார்கள்”, என்றார் அருட்செல்வன். பிஎஸ்எம் ஓர் அரசியல் கட்சியாக பதிவுபெறவே பத்தாண்டுகள் ஆயிற்று என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

2008-இல் அதை அரசியல் கட்சியாக அங்கீகரித்து சங்கப் பதிவதிகாரி பதிவு செய்தார். அதன்பின்னர் கட்சியின் அடையாளச் சின்னத்துக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு ஓராண்டு காத்திருக்க வேண்டியதாயிற்று.

சோசியலிஸ் என்னும் பெயரில் 24-பக்கங்களைக் கொண்ட பிஎஸ்எம்-இன் அந்தச் செய்திமடல் மலாய்மொழியில் வெளிவரும்.

அது, பிஎஸ்எம்-இன் மூன்றாவது வெளியீடாகும். மற்ற இரண்டும் சீன, தமிழ்மொழியில் அமைந்தவை. அவை காலாண்டு செய்திமடல்களாக வெளிவருகின்றன.

உரிமம் கிடைத்தது பற்றிக் கருத்துரைத்த அருட்செல்வன், “ஆச்சரியமாகத்தான் இருந்தது. இனி, அதைக் கடைகளில் விற்பனைக்கு வைப்பதில் சிக்கல் இருக்காது. உரிமம் இல்லையென்றால் சில கடைக்காரர்கள் தயங்குவார்கள்”, என்றார்.

“உரிமம் கிடைத்தது கட்சியின் செய்தித்தாள் விற்பனைக்கு உதவும்”.

அதற்காக உள்துறை அமைச்சரைப் பாராட்டிய அருட்செல்வன், கணினி யுகத்தில் தணிக்கை எல்லாம் அர்த்தமற்றது என்றார்.

“பிஎஸ்எம்மின் வெளியீடுகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்காதிருந்தால் அதனால் ஆளும்கட்சிக்குத்தான் கெட்ட பெயர். இறுதியில் எல்லாமே இணையத்தளத்தில் வெளிவரத் தொடங்கிவிடும்.”