“அஸ்தி பறித்துச் செல்லப்பட்ட” சம்பவத்தில் தகனம் செய்யப்பட்ட மாது முஸ்லிம் ஆவார்

ஆகஸ்ட் 14ம் தேதி தென் செபெராங் பிராய் சமயத் துறை தகனம் செய்யப்பட்ட இந்திய மாது ஒருவரின் அஸ்தியைக் கைப்பற்றியது. அந்த மாது இஸ்லாத்துக்கு மதம் மாறியிருப்பதால் இந்து சமயப்படி அவருக்கு ஈமச் சடங்குகளை அவரது குடும்பத்தினர் செய்ய முடியாமல் போகலாம்.

64 வயதான எம் நாகம்மா என்ற அந்த மாது 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்லாத்துக்கு மாறியதற்கான பதிவேடுகளை செபெராங் பிராய் சமயத் துறை கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.

மரியா அப்துல்லா என்ற முஸ்லிம் பெயரைக் கொண்ட காலஞ்சென்றவருடைய குடும்பத்தினர், பத்து பெராப்பிட் சுடலையிலிருந்து அவருடைய அஸ்தியைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்க மறுத்து விட்டதாக கூறிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தத் துறை அதிகாரிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

அதே நாளன்று மரியா @ நாகம்மாவின் முதலாவது இந்து திருமணத்தின் மூலம் பிறந்த எம் கமாசந்திரன் என்ற புதல்வரும் மேலும் 17 பேரும் அஸ்தியை ‘திருடி’ சென்றதாக நிபாங் தெபால் போலீஸ் நிலையத்தில் பினாங்கு இஸ்லாமிய விவகாரத் துறைக்கு எதிராக புகார் செய்ததாக இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஆட்சி மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் காசிம் கூறினார்.

தென் செபெராங் பிராய் சமயத் துறையில் நாகம்மா மதம் மாறியுள்ளார் என்றும் அந்த மதமாற்றத்தை நடத்தியவர் உஸ்தாஜ் அனுவார் இஸ்மாயில் என்றும் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

“அவருடைய சமய நிலை குறித்து அவரது குடும்பத்துக்குத் தெரியும். அவரது கணவர் ஒரு முஸ்லிம். முஸ்லிம் என்ற பிரச்னை இங்கு எழவே இல்லை,” என பத்து மாவ்ங் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் மாலிக் சொன்னார்.

“ஆகவே அந்த விஷயத்தை புலனாய்வு செய்வதை நான் அதிகாரிகளிடமே விட்டு விடுகிறேன்,” என அவர் மேலும் சொன்னார்.

காலஞ்சென்றவர் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டிருந்தார்

நாகம்மா, இப்ராஹிம் நோயான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் நாகம்மாவுக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முஸ்லிம் பெயர்கள் உள்ளன என்றும் மாநில பிகேஆர் உதவித் தலைவருமான அப்துல் மாலிக் சொன்னார்.

தாம் அந்தத் தகவல்களை பினாங்கு இஸ்லாமிய விவகாரத் துறை, முப்தி அலுவலகம் ஆகியவற்றிலிருந்து பெற்றதாக அவர் தெரிவித்தார்.

பிரியாம் தோட்டத்தைச் சேர்ந்த நாகம்மா ஆகஸ்ட் 14ம் தேதி சுங்கை பாக்காப் மருத்துவமனையில் காலமான  பின்னர் அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவர் ஒர் இந்துவாக வாழ்ந்து இந்துவாக மரணம் அடைந்துள்ளதால் அவருக்கு இந்து சமய முறையிலான ஈமச் சடங்குகளை நடத்துவதற்குத் தாங்கள் தயாரானதாக குடும்பத்தினர் கூறினர்.

அவர் இறந்த 14 நாட்களுக்கு பின்னர் அதாவது ஆகஸ்ட் 28ம் தேதி கருமக்கிரியைகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு பின்னர் அஸ்தி அருகில் உள்ள ஆற்றில் வீசப்பட வேண்டும்.

இதனிடையே இந்து என்ற முறையில் காலஞ்சென்ற தமது தாயாரின் இறுதி ஈமச் சடங்குகளை நடத்துவதற்கான உரிமையும் கடமையும் கமாசந்திரனுக்கு இருப்பதாக நாகம்மா குடும்பத்தின் சார்பில் பேசிய ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன் கூறினார்.

தாயார் முஸ்லிம் என்பதால் கமாசந்திரன் அந்த கிரியைகளை நடத்தக் கூடாது என இந்து சமயம் கூறவில்லை எனக் குறிப்பிட்ட கணேசன், தாயார் உயிர் வாழ்ந்த போது எந்த சமயத்தைப் பின்பற்றினாலும் புதல்வர் என்ற முறையில் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கமாசந்திரனுக்கு இருப்பதாக வலியுறுத்தினார்.

மூத்த புதல்வருடைய கடமை

காலஞ்சென்றவருடைய வாழ்க்கையை சூழ்ந்துள்ள நிலைமைகள் காரணமாக மதம் மாற்றம் பற்றி குடும்பத்தினர் சர்ச்சை எழுப்பவில்லை என்றும் கணேசன் விளக்கினார். அவருடைய முதலாவது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாமல் அவை நிகழ்ந்துள்ளன.

“அவர் முஸ்லிமா இல்லையா என்பது இங்கு பிரச்னை அல்ல. இந்து என்ற முறையிலும் புதல்வர் என்ற முறையிலும் கமாசந்திரனுக்கு உரிமைகள் உள்ளனவா என்பதே பிரச்னை ஆகும். அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது ?” என கணேசன் வினவினார்.

“அவருடைய முதலாவது திருமணத்தின் மூலம் பிறந்த மூத்த புதல்வருக்கு- அவருடைய சமயத்தை பின்பற்றும் உரிமை உள்ளது. தமது தாயாருக்கு ஈமச் சடங்குகளை செய்ய வேண்டிய கடமை அவருக்கு உள்ளது.”

“இப்போது அவரது அஸ்தி திருடப்பட்டு விட்டதாக கருதப்படுகின்றது. இங்குள்ள பிரச்னை- ஒர் இந்து என்ற முறையில் அவருக்கு எந்த உரிமையும் இல்லையா ?” என அவர் வினவினார்.

அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அதிகாரிகளிடம் விட்டு விடுவதின் மூலம் அப்துல் மாலிக் அதனை மறைக்க முயலுவதாக கணேசன் குறை கூறினார்.

அத்தகைய விவகாரங்களில் சமயத் துறைகள் முடிவு செய்யக் கூடாது. நீதிமன்றங்களே முடிவு செய்ய வேண்டும். எனக் குறிப்பிட்ட அவர், “அது சிவில் நீதிமன்றமா அல்லது ஷாரியா நீதிமன்றமா” என அவர் கேள்வி எழுப்பினார்.