சிலாங்கூர் மந்திரி புசாராகக் காத்திருக்கும் விவசாய அமைச்சர் நோ ஒமாருடன் ஒப்பிடும்போது முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார், டாக்டர் முகம்மட் கீர் தோயோ ஒரு ‘கண்ணியவான்’ என்று செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம் கூறினார்.
“ஒரு விசயத்தில் இருவருக்கும் ஒற்றுமை உண்டு.இருவருமே சிலாங்கூர் அம்னோ தலைவர்கள்”, என்றாரவர்.
“இருவருமே பேராசை பிடித்தவர்கள்தான். ஆனால், நோவுக்கும் கீருக்குமிடையில் வேறுபாடு என்னவென்றால் கீர் அவ்வளவு தீயவரல்லர்.முரடருமல்லர்”, என்றவர் ஆகஸ்ட் 8-இல் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
ஷா ஆலமில் உள்ள கீரின் ஆடம்பர மாளிகை(வலம்)விவகாரத்தை அம்பலப்படுத்தியவர் இங்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாக கீர் மீது உழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து கீர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இப்போது இங், நோமீது கவனம் செலுத்துகிறார்.நோ, தஞ்சோங் காராங் அம்னோ தொகுதியுடன் சேர்ந்து அதிகாரத்தைத் தப்பாக பயன்படுத்தி சந்தை விலைக்குக் குறைவாகவே ஒரு நிலத்தை வாங்கி இருப்பதாக இங் குற்றம் சாட்டியுள்ளார்.
கீர், நோ இருவருமே இங் தங்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்திவிட்டதாகக் கூறி அவருக்கு எதிராக ஆளுக்கு ரிம10மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.
“அந்த வகையில் இப்போது என்னுடைய சந்தை மதிப்பு ரிம20மில்லியன்”, என்று இங் குத்தலாகக் குறிப்பிட்டார்.
கீர் மந்திரி புசார் வருமானத்தையும் மீறி ஓர் ஆடம்பர மாளிகை வாங்கிய விவகாரத்தை இங் அம்பலத்தியிருந்தபோதும் இருவரும் சந்தித்துக்கொள்ள நேரும்போது வாழ்த்து சொல்ல மறப்பதில்லை. கீரின் திறந்த இல்ல உபசரிப்புகளுக்குப் பலமுறை சென்றிருப்பதாகக் கூறினார் இங்.
“அவர் என்னிடம் நல்லாவே நடந்து கொண்டிருக்கிறார்.அதுதான் ‘ஆரோக்கிய அரசியல்’. அதில் தகாத அரசியல் கலாச்சாரமோ குண்டர்தனமோ கிடையாது.
“ஆனால், நோ அப்படிப்பட்டவர் அல்லர். அவர் அகந்தைமிக்கவர், ஆணவக்காரர், கொடுமையானவர், மூர்க்கமானவர், வன்செயலில் நாட்டம் உள்ளவர், ஒரு குண்டர்”.
இவ்வாண்டு முற்பகுதியில் என்ஜிஓ ஒன்றின் விருந்து நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்த இங், இருவரும் அவ்விருந்தில் கலந்துகொண்டிருந்தாலும் இருவருக்குமிடையில் வாய்ச்சண்டை முற்றியதாகக் கூறினார்.
அதன்பின்னர் இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காதபடி திருப்பி வைத்துக்கொண்டார்கள்.
“அதன்பின் இருவரும் பேசவில்லை. அவர் அவரது பிளேக்பெர்ரியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.நான் என் கைபேசியைத் தட்டிக்கொண்டிருந்தேன்”.
இன்னொரு மோசமான சம்பவத்தையும் இங் நினைவுகூர்ந்தார்.அதில் நோவாவின் அரசியல் செயலாளர் முகம்மட் ஸாபி அஸ்னாவி 30 பேருடன் வந்து தம்மைத் தாக்கியதாக அவர் சொன்னார். 2010-இல் நிகழ்ந்த சம்பவம் அது.
தஞ்சோங் காராங் விவசாயிகள் அழைத்திருந்தால் அவர்களின் குறைகளைக் கேட்கச் சென்ற இடத்தில் தாக்கப்பட்டதாக இங் கூறினார்.
அச்சம்பவம் பற்றி நோ-விடம் கருத்துக் கேட்கப்பட்டதற்கு இங் சட்டவிரோத ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார் என்றும் அதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் மக்கள் நல்ல பாடம் கற்பித்தார்கள் என்றும் குறிப்பிட்டார்.
“ஒரு அமைச்சரின் தரம் இதுதானா? அது, அவரது அகந்தையையும் முரட்டுக்குணத்தையும்தான் காண்பிக்கிறது. மாற்றரசுக்கட்சி சட்டமன்ற உறுப்பினரோ மற்ற எவருமோ தாக்கப்பட்டிருந்தால் ஒரு அமைச்சர் என்ற முறையில் அனுதாபம் தெரிவித்திருக்க வேண்டும், போலீஸிடம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும்…
“அதனால்தான் நான் நோவாவை ‘மந்திரி சம்செங் (சண்டியர் அமைச்சர்)’ என்று முத்திரை குத்தி வைத்திருக்கிறேன்”.
“அவரிடம் (கீர்) கண்ணியமிக்க தலைவருக்குள்ள குணங்கள் இருக்கின்றன.நோவாவிடம் அப்படி எதுவுமில்லை.அவர் கீரைவிட அபாயமானவர். நான் ஒரு தடவைகூட (நோவாவின் திறந்த இல்ல உபசரிப்புக்கு) போனதில்லை”,என்று சிரித்தவாறு கூறினார் இங்.