மான்சோர்: வலைப்பதிவு பிகேஆர்-டிஏபி உறவுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கர்வம் பிடித்தவர் என அழைக்கப்பட்டதாக கூறப்படும் பிகேஆர் கூட்டம் பற்றிய வலைப்பதிவு பிகேஆர்-க்கும் டிஏபி-க்கும் இடையில் உறவுகள் மோசமான நிலையில் உள்ளன என சித்தரிப்பதற்காக வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என பினாங்கு பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான் கூறியிருக்கிறார்.

பிரபலம் இல்லாத வலைப்பதிவு ஒன்றில் ‘வியூகக் கூட்டம்’ நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளதை முதலாவது துணை முதலமைச்சருமான மான்சோர் மறுத்தார். அந்தக் ‘கூட்டத்தில்’ பேசப்பட்ட விஷயங்களே அந்தக் கூட்டக் குறிப்புக்கள் என அந்த வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்றாலும் அதிகாரப்பற்றற்ற கூடம் நடைபெற்றதை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் முதலமைச்சரைக் குறிப்பிடும் வகையில் கூறப்பட ‘தொக்கோங்’ (தெய்வம்) போன்ற வார்த்தைகள் நல்ல நோக்கத்துடன் லிம்-மைப் பாராட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

“அங்கு நிகழ்ந்த விவாதங்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல. அவை கட்சி விவகாரங்களையும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் மய்யமாகக் கொண்டிருந்தன,” என்றார் மான்சோர்.

‘அகம்பாவம்’, ‘கர்வம்’, ‘தெய்வம்’  (‘cocky’, ‘arrogant’, ‘deity’) போன்ற சொற்கள் பிகேஆர்-க்கும் டிஏபி-க்கும் இடையிலான உறவுகளுக்கு மோசமான தோற்றத்தை தரும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.’

“எடுத்துக்காட்டுக்கு ‘தொக்கோங்’ என்ற சொல் முதலமைச்சர் மீது பினாங்கு மக்கள் வைத்துள்ள மரியாதையையும் மதிப்பையும் காட்டும் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டது,” என மான்சோர் மேலும் சொன்னார்.

பிகேஆர் -டிஏபி உறவுகள் உறுதியாக உள்ளன

பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வின் போது லிம் கர்வம் பிடித்தவர் அல்லது அகம்பாவம் உள்ளவர் எனத்  தாம்  கூறியதாகச் சொல்லப்படுவதை மான்சோர் மறுத்தார்.

“நான் அதனைச் சொன்னதாக நினைக்கவில்லை. முதலமைச்சர் கர்வம் பிடித்தவர் என்றோ அகம்பாவம் உள்ளவர் என்றோ நான் எண்ணவில்லை,” என்றார் அவர்.

“அந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன என்பது எனக்குத்  தெரியவில்லை. நான் ‘தொக்கோங்’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்தினேன். மிக முக்கியமாக அது எந்த தீய நோக்கத்துடனும் பயன்படுத்தப்பட்வில்லை,” என்றும் மான்சோர் வலியுறுத்தினார்.

அந்தத் தகவல்கள் அவ்விரு எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நிலவும் “நல்ல உறவுகளை நாசப்படுத்தவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தகவலுக்குப் பொறுப்பான குற்றவாளியைக் கண்டு பிடிக்கக் கட்சி இன்னும் முயன்று வருவதாகவும் அவர் சொன்னார்.

“அது கசிந்தது என நான் எண்ணுகிறேன். யார் குற்றவாளி என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. நாங்கள் இன்னும் அதனை விசாரித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார் மான்சோர்.

அந்த நிருபர்கள் சந்திப்பில் லிம், மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ், மாநில பிகேஆர் உதவித் தலைவர் அப்துல் மாலிம் அபுல் காசிம், பினாங்கு இஸ்லாமிய சமய மன்றத் தலைவர் சாலே மான், மாநில டிஏபி இளைஞர் தலைவர் இங் வெய் எய்க் ஆகியோரும் உடனிருந்தார்கள்.