‘சைனாய்ட் எதிர்ப்புப் பேரணிக்கான இடத்தை அங்கீகரிப்பதில் தாமதம் வேண்டாம்’

செப்டம்பர் 2ம் தேதி சைனாய்ட் எதிர்ப்புப் பேரணியை நடத்தும் இடத்தை காற்பந்துத் திடல் ஒன்றுக்கு மாற்றுமாறு போலீசார் தெரிவித்த யோசனையை சைனாய்ட் தடை நடவடிக்கைக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து புதிய இடத்துக்கு அனுமதி வழங்குவதைத் தாமதிக்க வேண்டாம் என அந்தக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலில் அந்தப் பேரணியை டாத்தாரான் ரவூப்பில் நடத்துவதற்கு குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த இடம் இன்னொரு நடவடிக்கைக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால் ரவூப் மாவட்ட மன்றம் அதனைத் தருவதற்கு மறுத்து விட்டது. அதற்கு பின்னர் ரவூப் பூமலைக்குப் பின்புறம் அமைந்துள்ள பாடாங் மைலோ என அழைக்கப்படும் அந்தத் திடலை போலீசார் பரிந்துரை செய்தனர்.

ஊராட்சி மன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த விண்ணப்பத்துக்கு உதவி செய்வதாக போலீசார் வாக்குறுதி அளித்துள்ளதாக குழு நேற்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

“உத்தேச மாற்று இடம் டாத்தாரான் ரவூப்-பிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அரை கிலோ மீட்டர் தொலைவில்தான் அது அமைந்துள்ளது. அதனால் அந்த இடத்துக்கு நடந்து சென்று விடலாம்.”

“புதிய இடம் அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதும் கூடுவதற்கு பொருத்தமானது என்பதும் சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.”

“அந்த இடம் முழு அளவுக்கு மனநிறைவைத் தரவில்லை என்றாலும் குழு விரிவான நலனைக் கருத்தில் கொண்டு அதனை ஏற்றுக் கொள்கிறது,” என அது விடுத்த அறிக்கை தெரிவித்தது.

டாத்தாரான் ரவூப்-பிலிருந்து பாடாங் மைலோவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதை அறியாத மக்களுக்கு வழி காட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

“புதிய இடத்துக்கான விண்ணப்பத்தை நடைமுறைகளுக்கு இணங்க பரிசீலித்து அடுத்த திங்கட்கிழமை27ம் தேதிக்குள் பதில் சொல்வதாக அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.”

 ஐந்து ஆண்டுகள் போராட்டம் தொடருகின்றது

செப்டம்பர் 2 பேரணி பற்றி பொது மக்களுக்கு விளக்குவதற்காக ரவூப் காலைச் சந்தையில் ஞாயிற்றுக் கிழமையன்று நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புக்கிட் கோமான் வட்டாரத்தில் இயங்கும் தங்கச் சுரங்கம் சைனாய்ட்-டைப் பயன்படுத்துவதால் அங்கு வாழும் மக்கள் பலவகையான நோய்களுக்கு இலக்காகி இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சைனாய்ட் தடை நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளனர். ஆனால் அவர்கள் சொல்வதை உறுதி செய்ய முடியவில்லை எனச் சுகாதார அமைச்சு சொல்கிறது.

தங்கச் சுரங்கத்தில் சைனாய்ட் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தக் குழு போராடி வருகின்றது. அதன் உச்சக் கட்டமாக ஹிம்புனான் ஹிஜாவ் ரவூப் என அழைக்கப்படும் செப்டம்பர் 2 பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் சுரங்க உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.