1,876போக்குவரத்துமீறல்கள் கேமிராவில் பதிவு

ஆகஸ்ட் 12தொடங்கி நேற்றுவரை போக்குவரத்துத் துறை(ஆர்டிடி)யின் சிறப்புப் பிரிவுகள் நாடு முழுக்க மேற்கொண்ட ‘ஒப்ஸ் செலாமாட்’ நடவடிக்கையில் மொத்தம் 1876போக்குவரத்து விதிமீறல்கள் கேமிராக்களில் பதிவாகியுள்ளன.

குற்றம் இழைத்தவர்களுக்கு சம்மன்கள் அனுப்பி வைக்கப்படும் என்று ஆர்டிடி துணைத் தலைமை இயக்குனர் இஸ்மாயில் அஹ்மட் கூறினார்.

பேராக்கில், 52விரைவு பேருந்துகளில் பயணிகள்போல் வேடமிட்டுச் சென்ற ஆர்டிடி அதிகாரிகள் பேருந்து ஓட்டுனர்கள் புரிந்த 10வகை விதிமீறல்களைப் பதிவு செய்தனர்.ஓட்டுனர்கள், பேருந்து ஓட்டிக்கொண்டே கைபேசியில் பேசுதல்,இரட்டைக் கோடுகளில் மற்ற வாகங்களை முந்திக்கொண்டு செல்லல், அனுமதிக்கப்பட்ட வேகத்தைமீறுதல்,ஒரே ஓட்டுனர் 400கிலோமீட்டரைத் தாண்டியும் பேருந்தை ஓட்டுச்செல்லல் முதலியவை அவற்றில் அடங்கும்.

“சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு 47சம்மன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன”, என்று நேற்று பேராக் கமுந்திங்கில் மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்ஸ் மோட்டோர்சிகல்’ நடவடிக்கையின்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் நாடு முழுக்க நடந்த 6,877சாலை விபத்துகளில் 61விழுக்காட்டு விபத்துகளில் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பின்புறம் அமர்ந்து செல்வோரும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதால் இவ்வாண்டு ஒப்ஸ் செலாமாட் நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள்கள்மீதே மிகுந்த கவனம் செலுத்தப்பட்டதாக இஸ்மாயில் கூறினார்.

ஒப்ஸ் செலாமாட் தொடங்கப்பட்டதிலிருந்து மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகளில் பேராக்கில்தான் அதிகமான விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டன.

“நேற்றிரவு பத்து மணிவரை, அரச மலேசிய போலீஸ், தேசிய போதைப்பொருள்-எதிர்ப்பு வாரியம் ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 284 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.24சம்மன்கள் வெளியிடப்பட்டன. நான்கு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.ஒரு சைக்கிளோட்டி போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது”, என்றவர் கூறினார்.

போக்குவரத்து சீராக உள்ளது

இதனிடையே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை(பிளஸ்)யில், வடக்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் சாலையில் இன்று காலை மணி 10வரை போக்குவரத்து சீராக சென்று கொண்டிருந்தது.

ஆனால், மக்கள் சொந்த ஊர்களில் ஹரி ராயாவைக் கொண்டாடிவிட்டு இன்று பின்னேரம் கோலாலம்பூருக்குத் திரும்பும்போது வாகனங்களின் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்ப்பதாக பிளஸ் நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.

மலேசிய நெடுஞ்சாலை நிர்வாக(எம்எச்ஏ)ப் பேச்சாளரும் எல்லா நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலின்றிச் சீராக இருப்பதாகக் கூறினார்.

போக்குவரத்து நிலவரம் பற்றித் தகவல் பெற விரும்பும் மக்கள் கட்டணமற்ற பிளஸ் தொலைபேசி எண்ணை-800-88-0000-அழைக்கலாம் அல்லது  www.twitter.com/plustrafik என்ற அதன் டிவிட்டர் தளத்துக்குச் செல்லலாம் அல்லது 1800-88-7752  என்ற எண்ணில் LLM-மைத் தொடர்பு கொள்ளலாம்.அதன் டிவிட்டர் தளத்துக்கும் சென்று தகவல் பெறலாம்.

-பெர்னாமா