அந்தக் கூட்டம் பற்றி விவரம் கூறுங்கள் என பினாங்கு பிகேஆர் பேராளர் கட்சியிடம் சொல்கிறார்

13வது பொதுத் தேர்தலுக்கான பினாங்கு வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட விவாதங்களை பிகேஆர் முழுமையாக விளக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாச்சாங் பூபோக் சட்டமன்ற உறுப்பினர் தான் ஹொக் லியோங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பினாங்கு முதலமைச்சர் அகம்பாவமும் கர்வமும் உடையவர் என பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் வருணித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய அந்தக் கூட்டம் குறித்து வினவப்பட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.

தான்-க்குப் பதில் இளைய வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றியும் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

தான் தவிர மாநிலத்துக்கான மற்ற பிகேஆர் சீனப் பிரதிநிதிகள் அனைவரும் போட்டியிடுவர் என்பதையும் அந்தக் கூட்டத்தில் மான்சோர் உறுதி செய்ததாகக் கூறப்பட்டது.

என்றாலும் அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் செய்தி எதுவும் கட்சித் தலைமைத்துவத்திடமிருந்து தமக்குக் கிடைக்கவில்லை என அந்த 57 வயது பேராளர் சொன்னார்.

மலேசியாகினியிடம் பேசிய அவர், தமது வயது ஒரு பிரச்னையாக்கப்படுவதற்குத் தாம் அனுமதிக்கப் போவதில்லை என தான் சொன்னார்.

“வெளியான தகவல்கள் உண்மை என்றால் நான் ஒதுக்கப்படுகிறேன் என அர்த்தம். முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு அவர்கள் நல்ல காரணத்தை வைத்திருக்க வேண்டும்.”

“அது என் வயது காரணம் என்றால் பினாங்கில் அனைத்து பிகேஆர் வேட்பாளர்களும் என்னை விட வயது குறைந்தவர்களாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

‘வயது ஒரு பொருட்டல்ல’

தமக்கு ஒரு முறை லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டதை ஒப்புக் கொண்ட அவர், அது தமது மாநிலப் பேராளர், துணை சபாநாயகர் பதவிகளுக்கான வேலைகளைப் பாதிக்கவில்லை என்றார்.

“நான் தொடர்ந்து வேலை செய்கிறேன். நான் மாநில சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். தலைமையும் தாங்குகிறேன். நான் என்னுடைய எல்லாப் பொறுப்புக்களையும் நிறைவேற்றி வருகிறேன்.”

“நான் செய்ய முடியாதது ஒன்று தான். அது தான் ஒடுவது. என்னைப் போன்று பல ஆரோக்கியமான மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் அவர்களால் ஒட முடியாது,” என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

தம்மை கைவிடுவதற்கு ஆரோக்கியத்தை, கட்சி என்ற முறையில் பிகேஆர் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஏனெனில் அவ்வாறு செய்வது “இயலாத நிலையில் இருக்கும் ஒருவரைத் தாழ்வாகப் பார்ப்பதற்கு” ஒப்பாகும்.

பினாங்கில் பிகேஆர் கட்சி பலவீனமாகவும் வேர் விடாமலும் இருந்த 2005ம் ஆண்டு தொடக்கம் கட்சியை வலுப்படுத்த தாம் உழைத்து வருவதாகவும் தான் குறிப்பிட்டார்.

அந்தக் கூட்டம் அதிகாரப்பூர்வமில்லாதது என்றும் கட்சி வியூகக் கூட்டம் இல்லை என்றும் மான்சோர் நேற்று கூறியிருக்கிறார்.

பினாங்கு முதலமைச்சர் அகம்பாவமும் கர்வமும் உடையவர் எனத் தாம் சொன்னதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். பினாங்கு முதலமைச்சர் தொடர்பில் தாம் ‘தொக்கோங்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட மான்சோர் அது அவரைப் பாராட்டும் வண்ணம் கூறப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டதும் அவை வெளியில் கசிந்ததும் தீய நோக்கம் கொண்டவை என வருணித்த அவர் “பிகேஆர்-க்கும் டிஏபி-க்கும் இடையிலான நல்ல உறவுகளை நாசப்படுத்துவது அதன் நோக்கம்” என்றார்.