பெட்ரோலிய வருமானத்திலிருந்து தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களுக்கு ரொக்கத் தொகையை வழங்கும் விவகாரத்தை நியாயமாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றி கிளந்தான் அம்னோ மக்களுக்கு விளக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும்.
அந்தச் சிறப்புக் குழு அமைக்கப்படுவது மீது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறான தோற்றதை சில தரப்புக்கள் கொடுத்துக் கொண்டிருப்பதால் அந்த விளக்கம் அவசியமாகிறது என கிளந்தான் அம்னோ தலைவர் முஸ்தாபா முகமட் கூறினார்.
“சிறப்புக் குழு ஆய்வை நடத்தி ரொக்கத் தொகை வழங்குவது மீது கூட்டரசு அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்வதற்கு நாங்கள் விட்டு விடுகிறோம்,” என அவர் கோத்தா பாருவில் வாடகைக் கார்/டாக்ஸி ஒட்டுநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
அந்த ரொக்கத் தொகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள மாநிலங்கள், அந்தத் தொகையின் அளவு, அதனை எப்படி மதிப்பீடு செய்வது ஆகிய விஷயங்களைச் சிறப்புக் குழு முடிவு செய்யும் என அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சருமான முஸ்தாபா சொன்னார்.
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீட் முகமட் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார்.
அந்தக் குழுவில் நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த சட்ட நிபுணர்கள், பாகாங், கிளந்தான், திரங்கானு ஆகியவற்றின் சுல்தான்களுடைய ஒப்புதலைப் பெற்ற மாநில அரசாங்கங்களின் பேராளர்கள் ஆகியோர் அங்கம் பெற்றிருப்பர்.