ஆறு மெர்டேகா தினச் சின்னங்கள்; அரசாங்கத்துக்கே குழப்பம்

மெர்டேகா தினத்துக்கென்று அரசாங்கம் ஆறு வகை சின்னங்களை வடிவமைத்துள்ளது ஆனால், அவற்றில் அதிகாரத்துவ சின்னமாக எதைப் பயன்படுத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இதைத் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆறு வெவ்வேறு சின்னங்களும் கவனப்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்திருப்பதாக சீனமொழி நாளிதழ் செய்தியொன்று கூறியது.

மெர்டேகா தினத்துக்காக முதலில் உருவாக்கப்பட்ட சின்னத்தில் அழகு இல்லை என்று சாடப்பட்டதை அடுத்து அது நீக்கப்பட்டு புதிதாக ஆறு வடிவமைக்கப்பட்டன.

அரசாங்கம்தான் அச்சின்னங்களை வடிவமைத்தது ஆனால், அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி இன்னும் நடைபெறுவதாக அந்த அதிகாரி கூறினார்.

“ஆகஸ்ட் 31-இல் எதை அதிகாரச் சின்னமாகப் பயன்படுத்துவது என்பதை அமைச்சு இன்னும் முடிவு செய்யவில்லை”.

இறுதி முடிவைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் தகவல்,தொடர்பு,பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திமும் மற்ற உயர் அதிகாரிகளும் செய்வர்.

ஆறு சின்னங்களிலும் 4முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவையாவன-1மலேசியா அடையாளச் சின்னம், Janji Ditepati” (வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன) என்ற கருப்பொருள் வாசகம், மெர்டேகா என்னும் சொல் 55ஆண்டுக்கால சுதந்திரத்தைக் குறிக்க “55” என்ற எண்.

மெர்டேகா பாடல் தேர்தல் பரப்புரைப் பாடல் போன்றிருப்பதாக குறைகூறப்பட்டதைத் தொடர்ந்து அப்பாடலையும் கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சைப் பிரதமர் பணித்திருப்பதாகவும் தெரிகிறது.

TAGS: