கெரக்கான் தனது கட்சித் தேர்தல்களை மேலும் எட்டு மாதங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கு உதவியாக தனது அமைப்பு விதிகளை திருத்துவதற்கு எண்ணியுள்ளது.
ஏற்கனவே கட்சித் தேர்தல்களை 15 மாதங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கு கட்சியின் அமைப்பு விதிகள் அனுமதித்துள்ளன.
“கட்சியின் அமைப்பு விதிகள் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்க 2008ல் கடைசியாக கட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. ஆகவே 2011ம் ஆண்டு இறுதிக்குப் பின்னர் 15 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,” என கட்சித் தலைவர் கோ சூ கூன் கூறினார்.
அடுத்த இரண்டு மாதங்களில் பொதுத் தேர்தல் நிகழுமானால் கட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு கெரக்கானுக்கு இன்னும் எட்டு மாதங்கள் தேவைப்படும். பொதுத் தேர்தலும் கட்சித் தேர்தலும் ஒரே நேரத்தில் வருவதைக் காண நாங்கள் விரும்பவில்லை.”
அந்த வகையில் மேலும் எட்டு மாதங்களுக்குக் கட்சித் தேர்தல்களைத் தள்ளி வைப்பது பொதுத் தேர்தல் மீது மத்தியக் குழுவும் பேராளர்களும் கவனம் செலுத்துவதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும் என அவர் சொன்னார்.
13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படலாம்.
செப்டம்பர் 29ம் தேதி தொடக்கம் இரண்டு நாட்களுக்கு நிகழும் தேசியப் பேராளர் மாநாட்டில் விவாதத்திற்கும் அங்கீகாரத்துக்கும் சமர்பிக்கப்படவிருக்கும் இரண்டு தீர்மானங்களில் அதுவும் ஒன்று என கோ குறிப்பிட்டார்.
2012ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்திற்கு இணங்க பட்டதாரி மாணவர்களை கெரக்கான் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளும் பொருட்டு கட்சி அமைப்பு விதிகளை திருத்தம் செய்வது இரண்டாவது தீர்மானம் ஆகும்.