பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாண்டுக்கான தேசிய நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு ஈடாக அவர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுவது பற்றி அரசாங்கத்துக்கும் எதுவும் தெரியாது என பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் கூறுகிறார்.
“அது பற்றி எனக்குத் தெரியாது. ருக்குன் தெத்தாங்கா அமைப்பின் ஒரு பகுதியான Jiran Muda உறுப்பினர்களை தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்புத் துறை திரட்டி வருகின்றது. அவர்களுக்கு நாங்கள் போக்குவரத்தும் உணவும் வழங்குகிறோம்,” என அவர் சொன்னதாக தி ஸ்டார் நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கொண்டாட்டங்களுக்கு பங்கேற்பாளர்களைச் சேர்ப்பதற்கு அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை என கோ தெளிவுபடுத்தினார்.
“அந்த ஜிரான் மூடா உறுப்பினர்களில் மாணவர்களும் உள்ளனர். ஆனால் நாங்கள் அவர்களைச் சேர்ப்பதற்காக பள்ளிக்கூடங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் செல்லவில்லை,” என அவர் அந்த நாளேட்டிடம் கூறினார்.
தேசிய நாள் கொண்டாட்டங்களில் பங்கு கொள்கின்றவர்களுக்கு இலவச உணவு, போக்குவரத்து, டி சட்டை ஆகியவற்றுடன் 100 ரிங்கிட் ரொக்கமும் வழங்குவதாக தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்புத் துறை மின் அஞ்சல் வழி வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறும் மலேசியா இன்சைடர் செய்தி குறித்து கோ கருத்துரைத்தார்.
18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 1,000 மாணவர்களை சேர்ப்பதற்கு அந்தத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வுக்கு சீன, இந்திய மாணவர்களை அது நாடுவதாகவும் செய்தியில் குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.