கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், தமது அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ மெந்தாலூனில் நேற்று தாம் நடத்திய சொந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் காணப்படவில்லை.
அஜிஸான் உட்கொள்ளும் மாத்திரைகளில் ஒன்று அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளதால் உபசரிப்பில் கலந்து கொள்ளவில்லை என நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உடல் நலக் குறைவால் அஜிஸான் விடுமுறையில் இருப்பதாக மாநில வீடமைப்பு, முதலீட்டுக் குழுத் தலைவர் அமிருதின் ஹம்சா சொன்னதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்றாலும் அஜிஸான் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
“ரமதானின் கடைசி சில நாட்களில் மந்திரி புசாருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போதிலும் அவர் தமது பணிகளையும் பொறுப்புக்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார்.”
“அவர் நோயிலிருந்து விடுபடும் பொருட்டு ஒய்வு எடுப்பதற்காக புதன் கிழமையன்று தான் விடுமுறை எடுத்துக் கொண்டார்.”
“கடுமையாக ஒன்றுமில்லை. அவர் அடுத்த புதன் கிழமை அலுவலகத்துக்கு அஜிஸான் திரும்புவார் என நான் நம்புகிறேன்,” என்றும் அமிருதின் சொன்னார்.
72 வயதான மந்திரி புசார் சுங்கை லிமாவ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.