திறம்பட செயல்படாத அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும், அட்னான்

அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், திறமையாக செயல்பட முடியாத கட்சித் தலைவர்கள் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் பதவிகளிலிருந்து விலகுவதே நல்லது என்று கூறியுள்ளார்.

“கட்சியின் செயல்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதை எனக்கும் அவர்களுக்கும் சேர்த்தே நினைவுப்படுத்துகிறேன்.

“இனியும் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிந்தால் வேலை செய்யக்கூடிய மற்றவர்களுக்கு இடமளித்து ஒதுங்கிக்கொள்வதே நல்லது”.இன்று உத்துசான் மலேசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் தெங்கு அட்னான் இவ்வாறு குறிப்பிட்டார்.

கட்சி நலன் தனிப்பட்டவர் நலனைவிட மேலானது என்பதை அவர் வலியுறுத்தினார்.

“ கட்சியால்தான் அரசு பதவிகளை வகிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”.

அம்னோ தலைவர்கள் சிலருக்குக் குறை சொன்னால் பிடிப்பதில்லை என்று அட்னான் குறிப்பிட்டார்.ஆனால், அவர்கள் யார் என்பதைச் சொல்லவில்லை.

“குறைகூறல்களை ஏற்க முடிவதில்லை.தாங்கள் சொல்வதும் செய்வதுமே சரி என்று நினைக்கிறார்கள்.ஆனால், உண்மை கசப்பானது.

“உண்மையைச் சொன்னால் சில தலைவர்கள் தாங்க மாட்டார்கள்.ஆடிப் போவார்கள்”, என்றவர் உத்துசானிடம் தெரிவித்தார்.

அவர்கள் உண்மையை மறுக்க முனைவார்கள் என்று கூறிய தெங்கு அட்னான் அடிநிலை உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாம் இவ்வாறு குறைசொல்வதாகக் கூறினார்.

“என்னை நம்புங்கள்.கட்சியின் நன்மைக்காகத்தான் இப்படிக் கூறுகிறேன்.கட்சியில் உள்ள எவரையும் புண்படுத்தவோ, எவர்மீதுமுள்ள வெறுப்பின் காரணமாகவோ இப்படியெல்லாம் பேசவில்லை”, என்றவர் அந்நேர்காணலில் கூறினார்.