‘பொய்யான குற்றப் புள்ளிவிவரங்களை மூன்று அமைச்சர்கள் மறுக்க வேண்டும்’

மூன்று அமைச்சர்கள், குற்றச் செயல்கள் குறைந்துள்ளன என்ற தோற்றத்தைத் தருவதற்காக போலீஸ் குற்றப் புள்ளிவிவரங்கள் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மீது கடந்த நான்கு நாட்களாக தாங்கள் அனுசரித்து வரும் மௌனத்தை கலைக்க வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா (அவர் பெமாண்டு எனப்படும் அடைவு நிலை பட்டுவாடாப் பிரிவின் தலைவரும் ஆவார்) நஜிப் நிர்வாகத்தின் முக்கிய அடைவு நிலைக் குறியீடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் ஆகியோரே அந்த மூவரும் ஆவர்.

குற்றச் செயல்கள் குறைந்துள்ளன என கூட்டரசு அரசாங்கத்தைத் திருப்தி செய்வதற்காக குற்றப் புள்ளி விவரங்களில் போலீசார் வேண்டுமென்றே தில்லுமுல்லு செய்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் அனாமதேயக் கடிதம் ஒன்றை லிம் குறிப்பிட்டுப் பேசினார்.

வீடுகளை உடைத்துத் திருடுவது(burglary), கொள்ளை (robbery), ‘காயம் விளைவிப்பது’ (“causing hurt”) ஆகியவை- அந்தக் குற்றச் செயல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்- பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் போலீசார் அட்டவணைக் குற்றங்கள் (“index crime”) என அழைக்கும் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை என அந்தக் கடிதத்தின் ஆசிரியர் கூறிக் கொண்டுள்ளார்.

அதன் வழி அரசாங்கத்தின் முக்கிய அடைவு நிலைக் குறியீட்டு இலக்குகளுக்கு ஏற்ப குற்றச் செயல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காட்டும் வகையில் தேசிய குற்றப்புள்ளி விவரங்கள் சரி செய்யப்படுகின்றன என்றும் அந்த ஆசிரியர் சொல்லிக் கொண்டார்.

அந்த அனாமதேய போலீஸ்காரருக்கு நன்றி

புத்ராஜெயாவிலிருந்து ஏதாவது ஒரு வகையில் மறுப்பு ஏதும் வராவிட்டால் கூட்டரசு அரசாங்கம் மெர்தேக்கா தினத்துக்கான தனது ‘Janji Ditepati’ என்னும் சுலோகத்தைக் கேலிக் கூத்தாக்கி விடும் என்றும் லிம் வாதாடினார்.

“உள்துறை அமைச்சரும் இரண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான அமைச்சர்களும் செய்து வந்த பொய்ப் பிரச்சாரத்தை அந்த அடையாளம் தெரியாத ஆனால் நாட்டுப் பற்றுள்ள போலீஸ் அதிகாரி முறியடித்து விட்டார். அது மெர்தேக்கா தினக் கருப்பொருள் எவ்வளவு அர்த்தமற்றது, வெறுமையானது என்பதை உணர்த்தி விட்டது,” என லிம் நேற்று விடுத்த இன்னொரு அறிக்கை குறிப்பிட்டது.

அந்த மூன்று அமைச்சர்களும் தொடர்ந்து மௌனம் அனுசரித்தால், தகவல்களை வெளியிட்ட அந்த அனாமதேய போலீஸ் அதிகாரிக்கு மலேசியர்கள் நன்றி கூற வேண்டும்.

“குற்றச் செயல்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்படும் வேளையில் மலேசியர்களிடையே குற்றச் செயல்கள் பற்றிய அச்சம் ஏன் மேலோங்கி வருகிறது என கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிய மர்மத்திற்கு மலேசியர்கள் ஒரு வழியாக இறுதியில் பதில் கிடைத்து விட்டதாகத் தோன்றுகிறது.”

அந்த மூன்று அமைச்சர்களும் அதிகாரத்துவ விளக்கத்தைத் தரும் வரையில் அந்த அனாமதேய போலீஸ்காரரின் கடிதம் குறித்து கருத்துச் சொல்வதை சரியான சிந்தனையைக் கொண்ட மலேசியர்கள் தள்ளி வைப்பதாக லிம் இன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த மௌனம் தொடருவது இன்னும் மோசமானது. அது ‘Janji Ditepati’ என்ற 55வது மெர்தேக்கா தினக் கருப்பொருளுக்கு விரும்பாத பல அர்த்தங்களைக் கொடுத்து விடும்.”

விளக்கம் ஏதும் இல்லாவிட்டால் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை விவாதிக்க சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என லிம் யோசனை தெரிவித்தார்.