ஹுடுட் தொடர்பில் மசீச-டிஏபி நடத்தும் சர்ச்சை குறித்து அபிம் கவலை அடைந்துள்ளது

ஹுடுட் சட்டம் மீது மசீச டிஏபி தலைவர்கள் அண்மைய காலமாக விடுத்து வரும் அறிக்கைகள் முஸ்லிம்களுடைய உணர்வுகளை காயப்படுத்துகின்றன என்றும் இஸ்லாம் மீதான அச்சத்தை (Islamophobia)ஊக்குவிக்கின்றன என்றும் அபிம் எனப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் கூறியுள்ளது.

அந்த அறிக்கைகள் ஹுடுட் நீதிபரிபாலனம், முழுமையாக இஸ்லாம் ஆகியவற்றின் உண்மையான அர்த்தங்களையும் உணர்வுகளையும் கருத்தில் கொள்ளவில்லை என அபிம் தலைவர் அமிடி அப்துல் மானான் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

“இந்த நிலை கட்டுப்பாடு இல்லாமல் தொடருமானால் உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையிலான ஒற்றுமையை பாதித்துள்ள இஸ்லாம் குறித்த அச்சம் மலேசியாவுக்கும் பரவக் கூடும்,” என அவர் சொன்னார்.

இஸ்லாம் முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகளை மறுக்கவில்லை என வலியுறுத்திய அமிடி, maqasid al syariah கோட்பாட்டின் ( ஷாரியாவின் உயர்ந்த நோக்கங்கள்) மூலம் அது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றார்.

“அதனைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் அல்லாதாரிடையே தவறான தோற்றத்தை உருவாக்கும் பொருட்டு இஸ்லாமிய சட்டம் தொடர்பில் சர்ச்சையைத் தொடங்கும் எந்த முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.’

அந்த விவகாரம் மீது விளக்கம் பெற இரண்டு கட்சிகளுக்கும் அபிமை மசீச-வும் டிஏபி-யும் அணுக வேண்டும் என்றும் அமிடி யோசனை தெரிவித்தார். அவ்வாறு விளக்குவதற்காக கல்வி ஆய்வரங்கு ஒன்றை நடத்தவும் அபிம்  தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இஸ்லாமியச் சட்டத்தை முஸ்லிம் அல்லாதாருக்கு விளக்குவதற்காக பல நிகழ்வுகளை நடத்தவும் அபிம் ஆயத்தமாக இருப்பதாகவும் அமிடி மேலும் தெரிவித்தார்.

 

TAGS: