எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் புத்ராஜெயாவில் உள்ள பிரதமருக்கான அதிகாரத்துவ இல்லத்தில் வசிக்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார்.
அவர் நேற்று புக்கிட் கந்தாங்கில் பேராக் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பேசினார்.
“அந்த இடத்துக்கான மின்சாரக் கட்டணம் மிக மிக அதிகமாக உள்ளது,” என அவர் சொன்ன போது அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.
“அங்கு மின் கட்டணம் மட்டும் பல ஆயிரக்கணக்கில் வருகிறது,” என அன்வார் புன்னகையுடன் சொன்னார்.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சிம்பாங்கில் நடத்தப்பட்ட அந்தத் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்தவர்கள் அன்வாரும் மற்ற பிகேஆர், பாஸ், டிஏபி தலைவர்கள் பேசுவதற்கு மேடையை அமைக்கத் தவறி விட்டனர். அதனால் அன்வார் கூட்டத்தினருக்கு மிக அருகில் நின்று கொண்டு பேச வேண்டியிருந்தது.
அன்வார் தொடர்ந்து தமது உரையில் அம்னோ/பிஎன் -னிம் ஊழல்களையும் திறமையின்மையையும் முறைகேடான நிர்வாகத்தையும் விவரமாக எடுத்துரைத்தார்.
“நான் பிரதமரானால் புக்கிட் சிகாம்புட்டில் உள்ள என் வீட்டிலேயே இருப்பேன். புத்ராஜெயாவில் தங்க வேண்டிய தேவை இல்லை,” என்றும் அவர் கூறினார்.
“பழைய கார்களையே பயன்படுத்துமாறு நான் என் அமைச்சர்களுக்குச் சொல்வேன். புதிய கார்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களிடம் இருப்பதை வைத்து சமாளிப்போம்.”
“இறைவன் அருளால் கிடைத்துள்ள இந்த நாட்டின் வளப்பத்தை ஒரு சிலர் முழுங்கிக் கொண்டிருக்கின்றனர். எண்ணெய், வெட்டுமரம் உண்மையில் உங்கள் அனைவருக்கும் சொந்தமானவை,” என அன்வார் மேலும் விவரித்தார்.
“ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் மலாய்க்காரர்களும் அடங்குவர். ஆனால் சீனர்கள், இந்தியர்கள், கடாஸான்கள், டயாக்குகள் ஆகியோரிலும் ஏழைகள் உள்ளனர். அனைவருக்கும் சொந்தமான வளங்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு.”
அவர் இதனைச் சொன்ன போது மக்கள் மீண்டும் ஆரவாரம் செய்தனர்.
அன்வாருக்கு முன்பு புக்கிட் கந்தாங் தொகுதியில் நடப்பு எம்பி நிஜார் ஜமாலுதினுக்குப் பதில் போட்டியிடக் கூடும் எனக் கருதப்படும் பாஸ் கட்சியின் இட்ரிஸ் அகமட் பேசினார்.
அரசாங்கக் கடன் அளவு இப்போது 456 பில்லியன் ரிங்கிட்டாக இருப்பதாகத் தெரிவித்த அவர், நாம் ஒவ்வொருவர் மீதும் 16,000 ரிங்கிட் கடன் சுமத்தப்பட்டுள்ளது என்பதே அதன் அர்த்தம் என்றார்.
பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க முடியாமல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தடுமாறுவதையும் அவர் சாடினார்.
“பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதில் அம்னோ வெற்றி கண்ட அடுத்த நிமிடமே ரோஸ்மா மான்சோர் உத்தரவின் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்,” என இட்ரிஸ் கிண்டலாகக் கூறினார்.