முன்னாள் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப் எழுப்பிய போலீஸ் ஊழல் விவகாரத்தின் போது தமது சொத்துக்கள் சட்ட விரோதமாக தேடப்பட்டதாக கூறிக் கொண்டு வழக்குரைஞர் ரோஸ்லி டாஹ்லான் தொடுத்துள்ள 50 மில்லியன் ரிங்கிட் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புக்களில் ஒன்றாக பாங்க் நெகாரா மலேசியாவை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு ஆதரவாக முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அந்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டிருந்த பாங்க் நெகாராவின் நிதி வேவுப் பிரிவு நிர்வாகி அப்துல் ரஹ்மான் அபு பாக்காரை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் லூயிஸ் ஒ ஹாரா கடந்த நவம்பர் மாதம் அதிலிருந்து அகற்றினார்.
ஆனால் இன்று முறையீட்டு நீதிமன்றம் பாங்க் நெகாராவை அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புக்களில் ஒன்றாக மீண்டும் இணைத்தது. சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியோர் மற்ற பிரதிவாதிகளில் அடங்குவர்.
பிரதிவாதிகளில் ஒருவராக அப்துல் ரஹ்மானை நிலை நிறுத்திய முறையீட்டு நீதிமன்றம், ராம்லி மீதான விசாரணைகளின் போது ரோஸ்லியின் சொத்துக்களைத் தேடுவதில் மற்றவர்களுடன் அவர் ஒத்துழைத்ததாகக் கூறியது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவுக்கு நீதிபதி ராம்லி அலி தலைமை தாங்கினார். நீதிபதி ஸாஹாரா இப்ராஹிம், நீதிபதி ஆனந்தம் ஆகியோர் மற்றவர்கள்.