சில தரப்புகள் தாம் கட்சியையும் அதன் தலைமையையும் களங்கப்படுத்திவிட்டதாகக் கூறுவதை மஇகா உதவித் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.தேவமணி மறுத்தார்.
13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்குக்கும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலுக்கும் மட்டுமே உண்டு என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறிய தேவமணி தாம் ஒருபோதும் வரம்புமீறி நடந்துகொண்டதில்லை என்றார்.
“நம்(மஇகா) கவனமெல்லாம் பிஎன் வெற்றியை உறுதிப்படுத்துவதிலும் கடந்த தேர்தலில் இழந்த தொகுதிகளைத் திரும்பக் கைப்பற்றுவதிலும்தான் இருக்க வேண்டும்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
பிரதமர்துறை துணை அமைச்சருமான தேவமணி, தமிழ் நாளேடு ஒன்று அவரின் நிலைப்பாடு குறித்தும் கட்சிக்கும் தலைவருக்கும் அவரின் விசுவாசம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது குறித்து கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.
கேமரன் மலையில் தேவமணியே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் கையெழுத்து இயக்கம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அச்செய்தித்தாள் கூறியது.
அந்த இயக்கம் ‘பத்திரமான பிஎன் தொகுதி’ என்று கருதப்படும் கேமரன் மலையில், பழனிவேல் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியாகும் எனவும் அது கூறியிருந்தது.
பழனிவேல் 2010-இல், மஇகா தலைவரானதிலிருந்தே அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடும் தொகுதி பற்றி தமிழ் நாளேடுகளில் நிறையவே ஆருடம் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த பொதுத் தேர்தலில் அவர், ஹுலு சிலாங்கூரில் பிகேஆர் வேட்பாளர் சைனல் அபிடின் அஹ்மட்டிடம் 198வாக்குகளில் தோற்றார்.
-பெர்னாமா