செப்டம்பர் 2ம் தேதி நடைபெறவிருக்கும் ‘Himpunan Hijau Raub’ என்னும் சைனாய்ட் எதிர்ப்புப் பேரணிக்குத் தங்களது ‘தூதர்களாக’ சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய்-யையும் சுற்றுப்பயண அமைச்சர் டாக்டர் இங் யென் யென் -னையும் பாகாங் புக்கிட் கோமான் குடியிருப்பாளர்கள் நியமித்துள்ளனர்.
சைனாய்ட்டை தடை செய்வதற்கான நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் நேற்று காலையில் ரவூப் சந்தையில் நடத்திய பேரணிக்கு முந்திய நிகழ்வில் லியாவ், இங் ஆகியோரது முகங்களைக் கொண்ட முகமூடிகளை அணிந்திருந்தனர். புக்கிட் கோமான தங்கச் சுரங்க விவகாரத்தில் அந்த இரு மசீச தலைவர்களும் பின்பற்றும் முரண்பாடான போக்கை எடுத்துக் காட்டும் பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
2008 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சைனாய்ட் எதிர்ப்பு இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை லியாவ்-வும் இங்-கும் தெரிவித்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது- ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை கைவிட்டதுடன் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும் புகார்களையும் அலட்சியம் செய்ததாகவும் கூறப்பட்டது.
செப்டம்பர் 2 பேரணியில் பங்கு கொள்ளுமாறு அந்த இரு ‘தூதர்களும்’ மக்களைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சைனாய்ட் எதிர்ப்புப் பதாதையிலும் கையெழுத்திட்டனர். அப்போது கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
சுற்றுப்பயண அமைச்சர் என்ற முறையில் ‘இங்’ பேரணி நிகழும் நாளன்று ரவூப்புக்கு வருகை புரியுமாறு மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.
சைனாய்ட் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த 50ம் உறுப்பினர்கள் தங்களது போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நடத்திய அந்த நிகழ்வின் போது பொது மக்களிடமிருந்து ஈராயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களும் திரட்டப்பட்டன. மூன்று மணி நேரம் நீடித்த அந்த நிகழ்வில் ஒராயிரம் பலூன்களையும் குழு உறுப்பினர்கள் விநியோகம் செய்தார்கள்.