மெர்டேகா கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளலாம், ரயிஸ்

வெள்ளிக்கிழமை புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே கலந்துகொள்ளலாம் எனத் தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அறிவித்துள்ளார்.அரங்கத்துக்குள்  அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சின் அதிகாரிகள் கூறியிருந்த சில மணி நேரத்துக்குப்பின் அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“ஆகஸ்ட் 31-இல் புக்கிட் ஜலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் 55ஆம் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

“புக்கிட் ஜலிலில் நடைபெறும் மெர்டேகா 55 கொண்டாட்டம் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே என்று சிலர் கூறுவது உண்மையல்ல.” நேற்று அமைச்சின் தலைமைச் செயலாளர் கமருடின் சியாராப் கூறியிருந்தது பற்றி வினவியதற்கு ரயிஸ்(இடம்) தம் டிவிட்டர் தளத்தில் இவ்வாறு விளக்கமளித்திருந்தார்.

“மாற்றரசுத் தலைவர்கள் சிலர், நாட்டின் 55வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் மக்களின் உரிமையைக் கெடுக்க முனைவதைப் பார்க்கையில் வருத்தம் மேலிடுகிறது”, என்றவர் தம் வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.

ஆனால், “சிலர்” யார் என்பதையோ அந்த “மாற்றரசுக்கட்சித் தலைவர்கள்” யார் என்பதையோ ரயிஸ் தெரிவிக்கவில்லை.

நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய கமருடின் சியாராப், புக்கிட் ஜலில் அரங்கில் உள்ள இருக்கைகள் முக்கிய பெருமக்களுக்கும் பிஎன் உறுப்புக்கட்சிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பள்ளிமாணவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய குழுக்களுக்கும் ஒதுக்கப்படும் என்றும் பொதுமக்கள் அரங்குக்கு வெளியில் வைக்கப்படும் நான்கு திரைகளில் நிகழ்வுகளைக் கண்டுகளிக்கலாம் என்றும் கூறினார்.

மாற்றுத்தரப்புத் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறிய அவர், அவர்கள் அரங்குக்கு வெளியே பொதுமக்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.

அவர்களுக்கு அரசாங்கத்தின் மெர்டேகா தினக்  கொண்டாட்டத்தில் “அக்கறை இல்லை” என்பதாலும் கொண்டாட்டச் சின்னத்தைக்கூட(வலம்) புறக்கணித்தார்கள் என்பதாலும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்றவர் விளக்கினார்.