‘பொய்யான’ குற்றப் புள்ளிவிவரங்கள்: அரசாங்க மௌனம் அதனை ஒப்புக் கொள்வதாக அர்த்தம்’

போலீஸ் மோசமடைந்து வரும் குற்றச் செயல் விகிதங்களை மறைக்கும் பொருட்டு  குற்றப் புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லு செய்துள்ளது என்று கூறப்படுவது மீது அரசாங்கம் ஆழ்ந்த மௌனம் அனுசரிப்பதைத் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டை மறுக்குமாறு அதிகாரிகளுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.

Pricewaterhouse Coopers (PwC) என்ற அனைத்துலக கணக்குத் தணிக்கை நிறுவனத்தால் தணிக்கை  செய்யப்பட்டு, சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு அரசாங்கம் அறிவித்த குற்றப் புள்ளிவிவரங்கள் துல்லிதமானவை எனப் பிரகடனம் செய்யுமாறு டிஏபி தேசியப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா  பெமாண்டு என்ற அடைவு நிலை நிர்வாக பட்டுவாடாப் பிரிவுக்கு சவால் விடுத்தார்.

“பெமாண்டு அல்லது PwC அந்தப் புள்ளி விவரங்கள் மீது அக்கறை காட்டா விட்டால் துல்லிதமல்லாத புள்ளி விவரங்களை வெளியிட்ட குற்றத்தை பெமாண்டு புரிந்துள்ளது….” என அவர் சொன்னார்.

“குற்றச் செயல்கள் எண்ணிக்கையை மறைப்பதற்கு தவறான தகவல்களை கொடுத்தது, புள்ளி விவர மோசடி ஆகிய குற்றங்களை புரிந்திருப்பது மிகவும் வினோதமானது.”

பெமாண்டு தனது ஆண்டறிக்கைகளிலும் பொது மக்களுக்கு நடத்தும் விளக்கக் கூட்டங்களிலும் எல்லாப் புள்ளி விவரங்களும் துல்லிதமானவை, எண்ணிக்கை சரியானவை என வலியுறுத்துவதற்காக அவை சுயேச்சை வெளி தணிக்கையாளர்களினால் “தணிக்கை  செய்யப்பட்டுள்ளன”, “சரி பார்க்கப்பட்டுள்ளன”, உறுதி செய்யப்பட்டுள்ளன என திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்துள்ளதை புவா சுட்டிக்காட்டினார்.

2011ம் ஆண்டுக்கான அரசாங்க உருமாற்றத் திட்டம் மீதான அறிக்கை, சாலை குற்றங்கள் ‘மகத்தான’ 39.7 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் மொத்த குற்றச் செயல்கள் 11.1 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் கூறிக் கொண்டுள்ளது.

ஆகவே குற்றப் புள்ளி விவரங்கள் தொடர்ந்து தில்லுமுல்லு செய்யப்பட்டு வருவதாக முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு உண்மையில் அதிர்ச்சியை அளித்துள்ளதாக புவா சொன்னார்.

‘முழு மோசடி’

குற்றச் செயல்கள் குறைந்துள்ளன என கூட்டரசு அரசாங்கத்தைத் திருப்தி செய்வதற்காக குற்றப் புள்ளி விவரங்களில் போலீசார் வேண்டுமென்றே தில்லுமுல்லு செய்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் அனாமதேயக் கடிதம் பற்றிப் புவா குறிப்பிட்டார்.

வீடுகளை உடைத்துத் திருடுவது (burglary), கொள்ளை (robbery), ‘காயம் விளைவிப்பது’ (“causing hurt”) ஆகியவை- அந்தக் குற்றச் செயல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்- பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் போலீசார் அட்டவணைக் குற்றங்கள் (“index crime”) என அழைக்கும் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை என அந்தக் கடிதத்தின் ஆசிரியர் கூறிக் கொண்டுள்ளார்.

அதன் வழி அரசாங்கத்தின் முக்கிய அடைவு நிலைக் குறியீட்டு இலக்குகளுக்கு ஏற்ப குற்றச் செயல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காட்டும் வகையில் தேசிய குற்றப்புள்ளி விவரங்கள் சரி செய்யப்படுகின்றன என்றும் அந்த ஆசிரியர் சொல்லிக் கொண்டார்.

அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் வெளியாகி ஒரு வாரமாகியும் போலீஸ், பெமாண்டு, உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோர் அதனை மறுக்காத நிலையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால் “பெமாண்டு வெளியிட்ட கவர்ச்சிகரமான குற்றப் புள்ளி விவர சாதனைகள் முழு மோசடி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என மலேசியர்கள் முடிவு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை,” என்றார் புவா.

“செயற்கையான சாதனைகளை வழங்கும் பொருட்டு தாங்கள் தில்லுமுல்லு செய்யவில்லை என்பதை உறுதி செய்வதற்காக போலீஸ் வழங்கிய புள்ளி விவரங்களின் துல்லிதத்தையும் உண்மையானது என்பதையும் தான் சரிபார்த்ததாக பெமாண்டு அல்லது விருப்பப்பட்டால் PwC உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் புவா மேலும் தெரிவித்தார்.