“முன்னாள் ஐஜிபி ஒருவர் ரகசியக் கும்பல் தலைவன் ஒருவனுடன் அணுக்கமான உறவுகளை வைத்திருந்தார் என அவரது சகாக்கள் குற்றம் சாட்டுவது உண்மையில் வினோதமானதாகும்.”
“தமக்கு ரகசியக் கும்பல் தலைவன் பற்றித் தெரியாது என முன்னாள் ஐஜிபி பொய் சொல்கிறார்”
அடையாளம் இல்லாதவன்_4020: வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இப்போது முற்றாக நசித்து விட்டது. போலீஸ் ஊழல் எனக் கூறப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து சிதைக்கப்பட்ட அது இன்னும் மீளவில்லை.
பல மில்லியன் டாலர் திருட்டுக்கள் சம்பந்தப்பட்ட முறையான ஆவணங்களைக் கொண்ட போலீஸ் புகார்கள் பல ஆண்டுகளாகவே விசாரிக்கப்படவில்லை. நல்ல தொடர்புகளைக் கொண்டவர்களுடைய ஆசைகளையே அவை இப்போது பூர்த்தி செய்வதாகத் தோன்றுகிறது.
அதன் முதுகெலும்பு முற்றாக உடைக்கப்பட்டு விட்டது. அதனால் நாட்டில் வர்த்தகக் குற்றங்கள் மலிந்து விட்டன. நீங்கள் பொய் கையெழுத்துக் கூடப் போடலாம். இரசாயனத் துறையும் அதனை போலி என உறுதி செய்யும். ஆனால் நீங்கள் நிச்சயம் தப்பி விடலாம்.
பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட்டால் சாட்சியமளிக்க நானும் தயாராக இருக்கிறேன்.
ஊமை& செவிடு: முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானும் முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அகமட் சைட் ஹம்டானும் தங்கள் தவணைக் காலத்தை முடிக்கும் முன்னரே பதவிகளிலிருந்து ராஜினாமா செய்தனர். அதற்கு என்ன காரணம் ? அவர்கள் அம்னோவுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி விட்டதால் ஏற்பட்ட உள் நெருக்குதல் ஆகும்.
ஆனால் அந்த ராஜினாமா காரணமாக அரசாங்க ஊழியர்களாக அவர்கள் பணியாற்றிய காலத்தில் செய்த தவறுகளிலிருந்து விடுபட்டு விட்டதாக கருத முடியாது. அவர்கள் மீது பின்பு கூட வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம். அது அவர்களுக்கு அவமானத்தைக் கொடுக்கும்.
ஸ்டார்ர்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக ஜோகூர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 1.7 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் 3.8 மில்லியன் ரிங்கிட் வரையில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் குற்றத்தைப் புரிய முடியும் என்றால் அது நிச்சயம் ரகசியக் கும்பல்களுடன் தொடர்புடையதாகத்தான் இருக்க வேண்டும். அவை அன்றாடம் நிகழும் குற்றங்கள் அல்ல.
அம்னோ/பிஎன் அரசாங்கம் ‘பிசாசு’ என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் தெரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பேய் எவ்வளவோ நல்லது என அவர் வாதாடுகிறார். வஞ்சகமாகப் பேசும் அவருடைய வலையில் மக்கள் எளிதாக விழப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
ஒடின்: முன்னாள் ஐஜிபி ஒருவரும் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவரும் கடுமையான முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னாள் உயர் நிலைப் போலீஸ் அதிகாரி ஒருவர் திரும்பத் திரும்ப குற்றம் சாட்டுகிறார். ஆனால் அவர்கள் இருவரும் அந்த அதிகாரி மீது வழக்குப் போடவே இல்லை.
அத்துடன் அதன் மீது நடவடிக்கை எடுக்க பிரதமரும் உள்துறை அமைச்சரும் மறுக்கின்றனர். மறைப்பதற்கு ஏதோ விஷயம் உள்ளது என்பதையே அது உணர்த்துகின்றது.
பீரங்கி: சில காலத்துக்கு முன்பு முன்னாள் ஐஜிபி-யான ஹனீப் ஒமார் இவ்வாறு கூறினார்: நமது போலீஸ் அதிகாரிகளுடைய வாழ்க்கை முறைகளை பார்க்கும் போது அவர்களில் கணிசமான பகுதியினர் தங்கள் வருமானத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழ்வது தெரிகிறது. இது தொற்று நோய் போல பரவி விட்ட விஷயமாகும்.
கண்ணுக்கும் தெரியும் ஆதாரங்களைக் கொண்டு பலரை விசாரிக்க முடியும். ஹனீப் சொல்வதும் அதுதான்.
மூன் டைம்: உண்மை வலிக்கிறது இல்லையா ” ஆனால் நடப்பு சூழ்நிலையில் ராம்லியால் இவ்வளவுதான் செய்ய முடியும். நடப்பு ஏஜி, ஐஜிபி, உள்துறை அமைச்சர் ஆகியோர் பொறுப்பில் இருக்கும் வரை எல்லாம் வழக்கம் போலத்தான் நடைபெறும். மலேசியா போலே.
ரகசியக் கும்பல்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசியல் துணிச்சல் பிஎன் -னுக்குக் கிடையாது. காரணம் அவ்வாறு செய்வது ‘இரு தரப்பு அழிவுக்கும் வழி வகுத்து விடும்’.
பாவி: அந்தக் கடுமையான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்காதது ஆளும் பிஎன் கூட்டணி மரண ஒலையாகும். ஆனால் முழுமையாக விசாரிப்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.