WWW1: நிஜாருக்கு இழப்பீடு கொடுக்க உத்துசானுக்கு உத்தரவு

கோலாலம்பூர் சிவில் உயர் நீதிமன்றம், முன்னாள் பேராக் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின், உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்குமாறு  அச்செய்தித்தாளின் உரிமையாளரான உத்துசான் மலாயு (எம்) பெர்ஹாட்டுக்கு  இன்று உத்தரவிட்டது.

இன்றைய விசாரணைக்கு உத்துசானின் வழக்குரைஞர் வராததால் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருப்பதாக நிஜாரின் வழக்குரைஞர் முகம்மட் ஜம்ரி இப்ராகிம் கூறினார்.

அதன் அடிப்படையில், உத்துசானிடம் கோரும் இழப்பீட்டை மதிப்பிட்டு அதற்கான மனுவைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்ற பதிவாளர் மஜுலியானா அப்துல் ரசிட் தம்மைக் கேட்டுக்கொண்டிருப்பதாக முகம்மட் ஜம்ரி தெரிவித்தார்.

“எவ்வளவு இழப்பீடு தேவை என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதால் இனிமேல்தான் அதை மதிப்பிட வேண்டும்”, என்றாரவர்.

தீர்ப்புக்கு எதிராக உத்துசான் மேல்முறையீடு செய்ய முடியாது என்று தெரிகிறது.ஆனால், அது இல்லாத நிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பைத் தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்ள அது அனுமதிக்கப்படும்.

முகம்மட் நிஜாரைத் தொடர்புகொண்டு பேசியபோது, உத்துசானால் எதிர்வாதம் செய்ய இயலாது என்பதால்தான் அது விசாரணைக்கு வரவில்லை என்றார்.

“அவர்கள்(உத்துசான்) வழக்குரைஞரை அனுப்பி வைக்கவில்லை ஏனென்றால் எதிர்வாதம் செய்ய அவர்களிடம் எதுவுமில்லை”.

ஜோகூர் சுல்தான் WWW1 என்ற வாகன எண் வாங்கியதன் தொடர்பில் தாம் கூறியதை வைத்து தமக்கெதிராக அவதூறான செய்தியை உத்துசான் மே 31-இல் வெளியிட்டிருந்தது என முகம்மட் நிஜார் தம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அவதூறான செய்தி மற்றவற்றுடன் தம்மைப் பொதுவாக சுல்தான்களுக்கும் குறிப்பாக ஜோகூர் சுல்தானுக்கும் ஒரு துரோகியாகவும் ஜோகூர் சுல்தானுக்கு எதிராக மக்களின் வெறுப்பைத் தூண்டி விடுபவருமாகச் சித்திரித்தது என்றார்.

டிவி3 வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 19-இல்

இதனிடையே முகம்மட் நிஜாரின் இன்னொரு வழக்குரைஞரான முகம்மட் பிட்ரி அஸ்முனி, சிஸ்டம் டெலிவிசன் மலேசியா பெர்ஹாட்டுக்கு(டிவி3) எதிரான அவதூறு வழக்கில் நீதிமன்றம் செப்டம்பர் 19-இல் தீர்ப்பளிக்கும் என்றார்.

“டிவி3 அதன் எதிர்வாதத்தைச் சமர்பித்தது.நாங்கள் அதற்கு பதில் அளித்தோம். நீதிமன்றம்(முகம்மட் நிஜாருடன்)பேசி ஒரு தீர்வு காணுமாறு டிவி3-ஐக் கேட்டுக்கொண்டிருக்கிறார்”, என்று முகம்மட் பிட்ரி கூறினார்.

இதனிடையே, பாஸின் இணைய செய்தித்தளமான ஹராகாடெய்லியில் இடம்பெற்றுள்ள நேர்காணலில், அடுத்தடுத்து நடந்துள்ள நிகழ்வுகள் அந்த அம்னோ செய்திதாள் படிப்பதற்கே அருகதையற்றது என்பதைக் காண்பிப்பதாக முகம்மட் நிஜார் கூறியுள்ளார்.

“முன்பு மாபுஸ்(ஒமார்)வென்றார்,லிம் குவான் எங் வென்றார், அதன்(உத்துசான்) செய்தியாளர் கர்பாலிடம் மன்னிப்பு கேட்டார்.

“ஆக, இனியும் என்ன இருக்கிறது இதில் படிப்பதற்கு.

“இந்தச் செய்தித்தாளை வாங்குவதையும் இந்த அக்பார் பிட்னா(பொய்சொல்லும் செய்தித்தாள்)வைப் படிப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு ஆலோசனை கூறுமாறு எங்கள் உலாமாக்களைக் கேட்டுக்கொள்வேன்”, என்றாரவர்.