டிவிட்டர்ஜயா #Merdeka55 -ல் ‘ஆவிகள்’

பொதுத் தேர்தல்களில் ஆவி வாக்காளர்களைப் பயன்படுத்துவதாக புத்ராஜெயா மீது பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த முறை #Merdeka55 என்னும் டிவிட்டர்ஜயா பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

நேற்று புக்கிட் ஜலிலில் நிகழ்ந்த மெர்தேக்கா கொண்டாட்டங்களின் தொடர்பில் பிரதமர் தமது டிவிட்டரில் hashtag #Merdeka55-ஐ பயன்படுத்த தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் டிவிட் செய்திகளை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் எதிர்பார்த்தார்.

ஆனால் அந்த இலக்கையும் தாண்டி தேச விசுவாச செய்திகளைத் தாங்கிய மொத்தம் 3,611,323 டிவிட்டர்கள் பிரதமருக்கு hastag #Merdeka55உடன் அனுப்பப்பட்டதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

என்றாலும் அந்த எண்ணிக்கையில் 38 விழுக்காடு சந்தேகத்துக்கு உரியவை என டிவிட்டர் ஆய்வு நிறுவனமான Politweet.org கண்டு பிடித்துள்ளது.

காரணம் அவை பல டிவிட்டர் கணக்குகளை கட்டுப்படுத்தும் மென்பொருளான- bots-களிடமிருந்து வந்திருக்கலாம் என அது கூறியது.

ஒரே கால இடைவெளிக்குள் 19,000 பயனாளிகளிடமிருந்து மொத்தம் 107,000 டிவிட்களை அது பெற்றுள்ளதை அது சுட்டிக் காட்டியது.

அதில் 38 விழுக்காடு பயனாளிகளில் 14 விழுக்காட்டினரிடமிருந்து வந்துள்ளன. அவர்கள் அனைவரும் TweetDeck-கைப் பயன்படுத்தியுள்ளனர்.

“அதாவது 2,761 பயனாளிகளிடமிருந்து 41,000 டிவிட்-கள் ஆகும். அவர்கள் பெரும்பாலும் ஸ்பேமர்கள்-(போலி) ஆக இருக்க வேண்டும்,” என Politweet.org கூறியது.

அது முகநூலில் டிவிட்டர்கள் பற்றிய தனது ஆய்வை வெளியிட்டுள்ளது.

TweetDeck என்பது டிவிட்டர் ஆதரவு மேடையாகும். ஒரே நேரத்தில் பல கணக்குகளைப் பயனாளி நிர்வாகம் செய்வதற்கு அது அனுமதிக்கிறது.