தூதுவன்: இண்ட்ராஃப் மனித உரிமை கட்சியின் உதயகுமார் எல்லாரையும் ‘மண்டோர்’ என்று சாடுகிறாரே, கோமாளியின் கருத்து என்ன?
கோமாளி: தூதுவனே, உதயகுமார் மற்றும் லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரர் வேதமூர்த்தி இருவருமே திறமையானவர்கள், தைரியசாலிகள். இண்ட்ராஃப் பேரணிக்கு அவர்களது தலைமைத்துவம்தான் முக்கிய காரணம். இவர்களது அரசியல் சித்தாந்தம் யாதார்த்தமானது. ஒரு புறந்தள்ளப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதால் இயல்பாகவே அந்த சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்துபவர்களை இவர்கள் வன்மையாகச் சாடுகிறார்கள்.
சிறுபான்மை இந்தியர்கள், உரிமை அடிப்படையிலும் தேவை அடிப்படையிலும் பல்லின சமூக அரசியல் உணர்வோடும் தீர்வுகளை அணுக வேண்டும். அதை விடுத்து தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல், மாற்றம் கண்டு வரும் உலக அரசியலுக்கு ஏற்ற வகையில் வியூகங்களை மாற்றாமல் வம்பு பிடிப்பது, கோமாளிக்குப் பிடிக்கவில்லை.
சடாம் உசேன், கடாபி, பின் அலி போன்றோர்கள் ஆதிக்க வெறிகளுக்கும் மக்களின் புரட்சிக்கும் பலியானவர்கள். விடுதலைப் புலிகள் என்ன செய்திருந் தால், என்ன நடந்திருக்கும் என்று இப்போ விவாதிப்பதால் என்ன பயன்?
உதயகுமாரின் அண்மைய நடவடிக்கைகள் அவருக்கும் சமூகத்திற்கும் உள்ள இடைவெளியை அதிகப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது. இந்தியர் அதிகம் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இவரின் பிடிவாதம், தேசிய முன்னணிக்கு ஆதரவான நாடகமாகவே கோமாளியால் கணிக்க முடிகிறது. இண்ட்ராஃப் பெற்ற வெற்றியை இந்த நடவடிக்கை முறியடிக்கும் என்றும் தோன்றுகிறது.
இன்று பெருமளவு அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுள்ள இந்தியர்களிடையே அவரின் மண்டோர் என்ற சாடல் பொருள் அற்றது. திறமையான அவர் திறனாக எதாவது செய்தால், இந்தியர்களுக்கும் நாட்டுக்கும் பயன் உண்டு!