மலேசியாவைக் குடியரசாக்குவதற்கான முயற்சிகள் பற்றி முஸ்தாப்பா எச்சரிக்கிறார்

மலேசியாவை குடியரசாக மாற்றுவதற்கு சில தரப்புக்கள் முயற்சிகள் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக கிளந்தான் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் முஸ்தாப்பா முகமட் எச்சரித்துள்ளார்.

“சில தரப்புக்கள் ஒரளவு மிகவும் தீவிரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. கூட்டரசு அரசமைப்பையும் தேசியக் கொடியையும் கூட அவை திருத்த விரும்புகின்றன,” என அவர் சொன்னார்.

“அவை மலேசியாவைக் குடியரசாக்க விரும்பக் கூடும் என்பதை அது கட்டுகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

பெங்காலான் செப்பா அம்னோ தொகுதி பேராளர் கூட்டத்திலும் பெங்காலான் செப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பிலும் முஸ்தாப்பா பேசினார்.

அந்தக் கூட்டத்தை உள்துறை அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான ஹிஷாமுடின் ஹுசேன் தொடக்கி வைத்தார்.

இந்த நாடு தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்த சுதந்திரத்தின் அடிப்படையை தற்காக்குமாறும் முஸ்தாப்பா மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் நிலவுகின்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகள் இயங்குவதால் அது அவசியமாகிறது என அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சருமான அவர் சொன்னார்.

அரசியல் ஆதரவுக்காக சமயத்தை ஒதுக்கி வைக்க அனுமதிக்கும் பொருட்டு சில அரசியல்வாதிகள் வெளியிடும் ‘பாத்வா’க்களை நிராகரிக்குமாறும் அவர் மலேசியர்களை கேட்டுக் கொண்டார்.

“ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்வது கட்டாயமானது என அவர்களது பாத்வா சொல்கிறது. அது தவறு. சட்ட விரோதக் கூட்டம் ஒன்றின் போது ரத்தம் சிந்தப்படுமானால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் ?” என அவர் கேள்வி எழுப்பினார்.

பெர்னாமா