ரவூப்பில் பசுமைப் பேரணி நிகழ்கிறது

அண்மைய காலமாக சுற்றுச்சூழல் போராட்டத்துக்கான மய்யமாக பாகாங் ரவூப் திகழ்கிறது. அந்த நகருக்கு அருகில் உள்ள தங்கச் சுரங்கத்தில் சைனாய்ட் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

அந்த சுரங்கத்திற்கு அருகில் உள்ள கம்போங் பாரு புக்கிட் கோமான் வாழ் மக்கள், சைனாய்ட் பயன்படுத்தப்படுவதால் தங்களது உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர். ஆனால் அரசாங்கமும் Raub Australia Gold Mining Sdn Bhd என்ற சுரங்க நிறுவனமும் அதனை நிராகரித்துள்ளன.

அந்த நிறுவனம் 2007ம் ஆண்டு செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே அதனை புக்கிட் கோமான் மக்கள் எதிர்த்து வருகின்றனர். அவர்களை சைனாய்ட்-டுக்கு தடை விதியுங்கள் குழு வழி நடத்தி வருகின்றது.

அந்தக் குழு நீதிமன்றங்கள் வழியாகவும் முறையீடுகள் வழியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் அவை பலனளிக்கவில்லை. எல்லா வழிகளிலும் முயற்சி செய்து தோல்வி ஏற்பட்ட பின்னர் அந்தக் குழு இன்று பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தது.

பாடாங் மைலோ என அழைக்கப்படும் ரவூப் விளையாட்டு வளாகத் திடலை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஊர்வலம் ஏதும் நடத்தக் கூடாது என்று போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை விதித்துள்ளனர். ஆட்சேபக் குறிப்பை பெற்றுக் கொள்ள பேராளர் ஒருவரை அனுப்புமாறு தங்கச் சுரங்க நிர்வாகத்தைப் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.