அம்னோ உறுதியாக நின்று நிலைத்திருக்கப் போராட வேண்டும் என்கிறார் ஸாஹிட்

13வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலுக்கு மகத்தான வெற்றி கிடைக்க வேண்டுமானால் அம்னோ தலைமைத்துவம் மெத்தனப் போக்கை கைவிட்டு 2008 தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி உணர்வுகளை ஒதுக்கி விட்டு போராட வேண்டும் என நினைவூட்டப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருந்ததால் மெத்தனப் போக்கு தலை தூக்கியது என அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி சொன்னார்.

“அந்த நிலை ஏற்பட்டதும் எல்லா அறிவுரைகளும் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலாகி விட்டன. எல்லாக் கருத்துக்களும் நிராகரிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் வாய்ப்புக்களை பற்றிக் கொள்வதில் மூழ்கியிருந்தனர். அதனால் கட்சியின் போராட்டங்கள் முக்கியத்துவத்தை இழந்து விட்டன,” என அவர் போர்ட்டிக்சனில் தெலுக் கெமாங் அம்னோ பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

மிகவும் மெத்தனமாக இருந்ததால் கட்சி அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. 2008 பொதுத் தேர்தலில் அதற்கு கிடைத்த ஏமாற்றமளிக்கும் அடைவு நிலையில் அதனைத் தெளிவாகக் காண முடிந்தது.

2008க்குப் பின்னர் கட்சியில் தோல்வி மனப்பான்மை பரவியது என்றும் அகமட் ஸாஹிட் சொன்னார்.

“அந்த தோல்வி உணர்வு தலை தூக்கியதும் நாம் அச்சமடைந்தோம், இக்கட்டான சூழலை எதிர்நோக்கினோம், ஏமாற்றமடைந்தோம், மாற்றங்களைச் செய்யவும் மறுத்தோம்.”

“இப்போது அரசியலிலும் அரசாங்கத்திலும் பிரதமர் நஜிப் ரசாக் பல உருமாற்றங்களை தொடங்கியுள்ளதால் அந்த உணர்வுகள் நமக்கு மீண்டும் ஏற்படாது என நான் நம்புகிறேன்,” என அவர் மேலும் சொன்னார்.

பெர்னாமா

 

TAGS: