பிசிஎம்: குவான் எங் கபடத்தனம் நிறைந்த பச்சோந்தி

பினாங்கு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், இரட்டை நாக்குக்கொண்டு பேசுவதாகவும் பார்டி சிந்தா மலேசியா (பிசிஎம்) குற்றம் சாட்டுகிறது.

முதலமைச்சர் லிம் குவான் எங் விதிகளை நிர்ணயிக்கிறார், பிறகு கட்சிக்குத் தேவை என்கிறபோது அவற்றை மீறுகிறார் என்று பிசிஎம் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான் (இடம்) கூறினார்.

பினாங்கில் எஸ்பிளேனேட்டில், பேச்சாளர் சதுக்கத்தில் ஒலிபெருக்கிகள்,மெகாபோன்கள் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் மாநில பிஎன் இளைஞர் தலைவர் ஓஒ தோங் கியோங் அந்த இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது “டிஏபி பாதுகாவலர்கள்” ஓர் ஒலிபெருக்கியை வைத்து அவரை நோக்கிச் சத்தமிட்டனர்.

பேச்சாளர் சதுக்கத்தில் பேச்சுகளைக் கேட்பதற்காகவே வரும் முதியோர் கூட்டம் ஒன்றைத்தான் டிஏபி பாதுகாவலர்கள் என்று ஹுவான் வருணித்தார்.அவர்கள்  யாராவது லிம்மைக் குறை சொல்லிப் பேசி விட்டால் போதும் உடனே லிம்மைத் தற்காக்கத் தொடங்கி விடுவார்கள்.

“பேச்சுரிமை இருப்பதாக சிஎம் (முதலமைச்சர்) வாக்குறுதி அளித்தார். ஆனால், பேச்சாளர், சிஎம் விரும்புவதைப் போல் பேசுவதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது”, என்று ஹுவான் கூறினார்.

“பிஎன் தலைவர்களுக்கு அல்லது கூட்டங்களுக்கு அந்த உரிமை இல்லை.

“கடந்த வாரம் மாநில பிஎன் எஸ்பிளேனேட்டில் கூட்டம் நடத்தியபோது சட்டவிரோத பேரணிச் சட்டம் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று லிம் மிரட்டினார்” என ஹுவான் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், தம் நிர்வாகம் பேச்சுரிமையில் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார்.அதனால்தான் “ஈராண்டுகளுக்குமுன் மலேசியாவிலேயே முதல்முறையாக பேச்சாளர் சதுக்கம் பினாங்கில் தொடங்கப்பட்டதாக”க் கூறினார்.

ஒவ்வொரு புதன்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எவர் வேண்டுமானாலும் அங்கு சென்று பேசலாம்.பதிவு செய்ய வேண்டியதில்லை, பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி)த்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை.

“சட்டவிரோத பேரணி என்று போலீசார் நடவடிக்கை எடுக்காதிருக்கவும் பொது ஒழுங்கு கெடாமல் இருக்கவும் ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்படுவதில்லை”, என்றும் அவர் சொன்னார்.

“குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம்.அதற்கு முன்அனுமதி பெற வேண்டும்.

“சம்பந்தப்பட்ட நிகழ்வில் பிஎன் ஆள்கள்தாம் ஒலிபெருக்கிகள் மூலமாக முதியோருக்குச் சவால் விட்டிருக்கிறார்கள்”, என்று லிம் கூறினார்.

எம்பிபிபி, ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தொடர்ந்து தடை விதித்து வரும் என்று தெரிவித்த பாகான் எம்பியுமான லிம், தாம் இப்படிச் சொல்வதை வைத்து “சட்டப்பூர்வ கூட்டங்களைக்கூட எதிர்ப்பதாக யாரும் தப்பாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

 ‘சட்டங்கள் எல்லாம் நிழல் ஆட்டங்களே’

இதனிடையே ஹுவான், சட்டங்களைக் கொண்டுவரும் லிம் அதே சட்டங்களை மீறுவதற்குத் தயங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.லிம் பினாங்கில்  தகவல் உரிமைச் சட்டம் கொண்டு வந்தார்.  திறமை,பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்க  கேட்(CAT) கொள்கை கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறினார்.

ஆனால், இதே சிம், தம் கொள்கைகளை அல்லது அரசியலைக் குறை சொல்லும் நாளேடுகளுக்குத் தடை போடுகிறார் என்று  ஹுவான் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

“அவர் ஒரு நாளேட்டுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.ரேய்ன்போ(முன்னாள் பணியாளருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் என்று கூறப்படும்) விவகாரம் பற்றி எழுதுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்”, என ஹுவான் கூறினார்.

“மாநிலச் சட்டங்கள் எல்லாம் நிழல் நாடகங்களே.தம் விருப்பத்துக்கு ஏற்ப அவர் அவற்றை வளைத்துக்கொள்கிறார்”என்று ஹுவான் சொன்னார்.