மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாள் டாத்தாரான் மெர்தேக்காவில் சிலர் ஈடுபட்ட அருவறுக்கத்தக்க சம்பவம் தொடர்பில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் செராஸில் உள்ள கல்லூரியில் அந்த 19 வயது மாணவர் இன்று நண்பகல் வாக்கில் கைது செய்யப்பட்டார்.
அந்தச் சம்பவத்தின் போது அந்த மாணவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் படங்கள் மீது தமது டிரவுசரை இறக்கி குதத்தை காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் நஜிப், ரோஸ்மா மான்சோர் படங்களை மிதித்தற்காக மாணவர் கைது செய்யப்பட்டார் என தி ஸ்டார் இணைய ஏடு கூறியது.
பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் இப்போது விசாரணைக்காக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஏடு தெரிவித்தது.
“அந்த நிகழ்வின் போது உடனிருந்த மேலும் இரு சாட்சிகளிடமும் போலீஸ் பேசியது,” என புக்கிட் அமான் சிஐடி பிரிவின் தலைமை உதவி இயக்குநர் அப்துல் ஜலில் ஹசான் கூறினார்.
போலீசார் அந்த சம்பவத்தை குற்றவியல் சட்டத்தின் 509வது பிரிவின் கீழ் விசாரிக்கின்றனர்.
ஒருவருக்கு அவமானத்தை தரும் நோக்கம் கொண்ட செயல் அல்லது சொல் சம்பந்தப்பட்டது அந்தப் பிரிவு ஆகும்.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அதே சம்பவத்தின் போது நஜிப், ரோஸ்மா படங்களை மிதித்த தனி நபர்களையும் போலீஸ் தேடி வருகின்றது.
‘விசாரணை நியாயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும்’
இதனிடையே அந்த சம்பவத்தை விசாரிப்பதற்கு போலீசாருக்கு எல்லா உரிமையும் இருப்பதாக பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பக்காத்தான் ஏற்கவில்லை என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்
“என்றாலும் போலீசார் தங்கள் விசாரணைகளில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் அல்லது பக்காத்தானுடன் அதனைப் பிணைக்கும் முடிவுகளுக்கு அவசரப்பட்டு வர வேண்டாம்.”
“அத்தகைய நிலை ஏற்படுவதற்கான சாத்தியமும் தென்படுகின்றன. ஏனெனில் விசாரணைகள் நிகழும் வேளையில் ஊடகங்கள் எங்கள் மீது அவசரப்பட்டு பழி போடுகின்றன. அது நியாயமல்ல,” என்றார் முஸ்தாபா.
போலீஸ் விசாரணைகள் நியாயமாக நடைபெறும் என பாக்காத்தான் நம்புவதாக ராசா எம்பி-யும் டிஏபி சோஷலிச இளைஞர் செயலாளருமான அந்தோனி லோக் கூறினார்.
டிஏபி தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங் படங்கள் எரிக்கப்பட்ட, ஈமச் சடங்குகள் நடத்தப்பட்ட முன்னைய சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார்.
“ஆனால் அந்த சூழ்நிலைகளில் போலீசார் விசாரணை நடத்தவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யவும் இல்லை,” என்றார் லோக்.
முன்னாள் இராணுவ வீரர்கள் சிலர் பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் குதத்தை ஆட்டும் உடற்பயிற்சியை செய்த போது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரும் சுட்டிக் காட்டினார்.
“அத்தகைய நடவடிக்கைகள் ஒருவரை களங்கப்படுத்துகின்றன. அவற்றை அங்கீகரிக்கக் கூடாது. என்றாலும் யாரும் கைது செய்யப்படவில்லை. மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று அருவறுப்பான செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் ஏன் மற்ற சம்பவங்கள் மீது அவ்வாறு செயல்படவில்லை ?” என அவர் வினவினார்.