114ஏ பிரிவை எதிர்க்கும் துணை அமைச்சர்களை துணைப் பிரதமர் அழைத்தார்

ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துணை அமைச்சர்களான சைபுடின் அப்துல்லாவையும் கான் பிங் சியூ-வையும் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அழைத்துப் பேசியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் அந்தத் தகவலை தொடர்பு கொள்ளப்பட்ட போது உறுதிப்படுத்தினார்.

“ஆம். அது உண்மையே. ஆனால் நான் அவர்களை அழைக்கவில்லை. அவர்களிடம் அந்த விஷயத்தை விளக்குவதற்காக துணைப் பிரதமர் என்னை அழைத்திருந்தார்,” என அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

அந்த இரண்டு துணை அமைச்சர்களையும் கண்டிப்பது என ஆகஸ்ட் 15ம் தேதி முஹைடின் தலைமையில் கூடிய அமைச்சரவை ஏற்கனவே எடுத்த முடிவை பிரதமர் நஜிப் ரசாக் தலைமையில் கடந்த வாரம் கூடிய அமைச்சரவை மாற்றி இருந்தும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய கூட்டத்தில் அவர்கள் கண்டிக்கப்படவில்லை என்றும் சைபுடின், கான் ஆகியோருடைய கருத்துக்களைப் பெறுவதே சந்திப்பின் நோக்கம் என்றும் நஸ்ரி தெரிவித்தார்.

“நாங்கள் அவர்களுடைய கவலைகளை அறிய விரும்பினோம். நாங்கள் எதிர்க்கட்சிகளைப் போல் அல்ல. அவற்றின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தூக்கி எறியப்படுகின்றனர்,” என அவர் கூறிக் கொண்டார்.

“அந்த 114ஏ பிரிவை தொடர்ந்து வைத்திருப்பது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆகவே நிலைமை துணை அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது.”

114ஏ பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் அரசாங்கத்தில் ஒர் அங்கம் இல்லை என்பதால் அவர் அழைக்கப்படவில்லை என்றும் நஸ்ரி சொன்னார்.

இதனிடையே அந்தச் சந்திப்பு ‘நன்றாக’ இருந்ததாக மலேசியாகினியுடன் நடத்திய குறுஞ்செய்தி பரிவர்த்தனைகளில் சைபுடின் வருணித்துள்ளார். என்றாலும் தமது நிலையில் உறுதியாக இருப்பதாக அவர் சொன்னார்.

114ஏ பிரிவுக்கான தேவை பற்றியும் அதன் நுட்பங்கள் பற்றியும் விளக்குவதற்காக முஹைடின் நஸ்ரியை அழைத்திருந்தார்.

அந்த விதிமுறை குறித்த என் கவலையை நான் தெரிவித்தேன். ஆனால் அவரது உலகளாவிய கருத்துக்கள் மாறுபட்டுள்ளன என அந்த உயர் கல்வித் துணை அமைச்சர் சொன்னார்.

“நஸ்ரியும் நானும் வெவ்வேறு வகையான கருத்துக்களைக் கொண்டுள்ளோம் என நான் கருதுகிறேன். முதிர்ச்சி அடைந்த முன்னேற்றகரமான ஜனநாயகத்துக்கான அரசியல் உருமாற்றம் மீது அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை பற்றியது என்னுடைய எண்ணமாகும்.”

“அத்துடன் அந்த பிரிவில் எழுதப்பட்டுள்ள வாசகமும் மிகவும் விரிவானது. குறிப்பாக ‘to facilitate’ ( ஆதரவாக) என்னும் சொல். சிறந்த நடைமுறைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.”

பிரேசில் நாட்டின் இணைய உரிமைகள் மசோதாவும் இணையத் தணிக்கை ஏதும் இருக்காது என உத்தரவாதம் அளிக்கும் பிரிட்டிஷ் அணுகுமுறையும் சிறந்த நடைமுறைகள் என்றும் சைபுடின் சொன்னார்.