ஹுடுட் சட்டம் மீதான பாஸ்-டிஎபி பிணக்கு வெறும் நாடகம், அந்த இஸ்லாமியக் கட்சிக்கு மலாய் ஆதரவை அதிகரிப்பதே அதன் நோக்கம் எனப் பெர்க்காசா கூறுகிறது.
பாஸ் கட்சிக்கு மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதை உறுதி செய்வதற்காக அந்த இரண்டு எதிர்க்கட்சிளும் தங்களுடைய பழைய நாடகத்தை மறு அரங்கேற்றம் செய்கின்றன என்று பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறினார்.
“கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் விடுத்த அறிக்கை ஒர் விளையாட்டு ஆகும். டிஏபி-யுடன் பகைமைப் போக்கைக் காட்டுவதும் ஒரு விளையாட்டு ஆகும்..”
“கர்பால் சிங் சொல்வதும் வெறும் நாடகமே. மலாய்க்காரர்களை முட்டாளாக்குவதற்காக டிஏபி ஹுடுட் சட்டம் மீது பாஸ் கட்சியுடன் சண்டையிட்டுக் கொள்கிறது.”
“பாஸ் கட்சியை மலாய்க்காரர்கள் ஆதரிப்பதை உறுதி செய்வதே அவர்கள் நோக்கம். மலாய்க்காரர்கள் பெரும்பான்மை இல்லாத இடங்களில் பாஸ் கட்சி நிச்சயம் போட்டியிடப் போவதில்லை,” என இப்ராஹிம் விடுத்த அறிக்கை கூறியது.
“நிக் அஜிஸின் அறிக்கை வெறும் பாசாங்கு அல்லது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகம். மலாய்க்காரர்களின் ஆதரவை அதிகரிப்பதற்காக நடத்தப்படும் பழைய நாடகமாகக் கூட அது இருக்கலாம்.”
“அது பாஸ் கட்சியின் வெறும் அரசியல் தந்திரம்.” என்றும் அவர் சொன்னார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நிக் அஜிஸ் “ஹுடுட் சட்டம் மீதான தமது உறுதியான நிலையைக் காட்டிக் கொள்ள” முயற்சி செய்கிறார் என அந்த பாசிர் மாஸ் எம்பி சொன்னார்.
பாஸ் கட்சியை டிஏபி-யின் கைப்பாவை என வருணித்த இப்ராஹிம் வரும் பொதுத் தேர்தலில் “பிஎன் -னை வீழ்த்துவதற்கு பாஸ் கட்சியிடம் அரசியல் மூலதனம் ஏதுமில்லை என்பதை” நிக் அஜிஸும் பாஸ் தலைமைத்துவமும் உணரத் தொடங்கியுள்ளதாகவும் கூறிக் கொண்டார்.