உண்மையான விசுவாசிகளை வரலாறு புறக்கணித்து விட்டது என்கிறார் கல்வியாளர்

நாட்டின் சுதந்திர வரலாறு பற்றிய விவாதம் நீடிக்கிறது- நாடு உண்மையிலேயே காலனித்துவ ஆட்சியில் இருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வேளையில் நாட்டின் சுதந்திரத்திற்கு உண்மையில் போராடிய “விசுவாசிகள்” பற்றியும் “பாசாங்கு செய்கின்றவர்கள்” பற்றியும் விளக்க கல்வியாளரான குவா கியா சூங் முயன்றுள்ளார்.

ஆகவே யார் “விசுவாசிகள்” யார்? “பாசாங்கு செய்கின்றவர்கள்”? காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த சாதாரண மக்களே விசுவாசிகள் என்கிறார் குவா. இரத்தம் சிந்தாமல் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெருமையைத் தட்டிக் கொண்டுள்ளவர்களே பாசாங்கு செய்கின்றவர்கள் என்கிறார் அவர்.

“அந்த விசுவாசிகள் தங்கள் உயிரையும் சுதந்தரத்தையும் பணயம் வைத்து நாட்டை தற்காத்தனர். இரண்டு முக்கியமான போர்களின் போதும் ஜப்பானிய இனவாதிகளுக்கு எதிராக இரண்டாம் உலகப் போரின் போதும் அடுத்து பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் அவர்கள் தங்களையே தியாகம் செய்து கொண்டனர்.”

“பாசாங்கு செய்கின்றவர்கள்- தங்கள் உயிரைப் பணயம் வைக்காத ஆனால் நாட்டுக்குச் சுதந்தரம் கிடைத்ததற்கு தாங்களே காரணம் எனக் கூறிக் கொள்கின்றனர்.  தொழிலாளர்கள், விசுவாசிகள், முன்னேற்ற சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தினர், AMCJA-Putera.. ஆகிய அமைப்புக்களில் இருந்தவர்கள் ஆகியோர் அடங்கிய காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தினால்தான் சுதந்தம் கிடைத்தது.”

அவர்கள் சார்ந்திருந்த அமைப்புக்கள் அம்னோவுக்கு முன்னரே சுதந்தரம் கோரிக்கையை விடுத்து விட்டனர் என குவா, “மலாயா சுதந்தரப் போராட்டம்: விசுவாசிகளும் பாசாங்கு செய்கின்றவர்களும்” என்னும் தமது புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வில் கூறினார்.

அந்த நிகழ்வில் பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சித் தலைவர் டாக்டர் முகமட் நாசிர் ஹஷிம், பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், சுதந்தரமான பத்திரிக்கைத் தொழிலுக்கான மையத்தின் நிர்வாக இயக்குநர் மாஸ்ஜாலிஸா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

159 பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகம் வர்க்க அடிப்படையில் நாட்டு வரலாற்றைக் கண்ணோட்டமிடுகிறது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆனால் மறக்கப்பட்டு விட்ட வீரர்களையும் அது நினைவு கூருகிறது.

பாடப் புத்தகங்களில் இனவாதத் தொனி

அந்த புத்தகம் 1948ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட அவசர காலம் மீது தனிக் கவனம் செலுத்தியுள்ளது.

பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் காணப்படுகின்ற தவறான வரலாற்று அம்சங்களையும் குவா சுட்டிக் காட்டியுள்ளார்.

கம்யூனிச கிளர்ச்சிக்காரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் மலாயாவில் அவசர காலத்தைப் பிரகடனம் (ஜூன் 1948) செய்த ஆறு மாதங்களுக்குப் பின்னரே (டிசம்பர் 1948) ஆயுதப் போராட்டத்தை அறிவித்தனர் என குவா சொன்னார்.

“காலனித்துவ அரசாங்கம் 1948 ஜுன் மாதம் அவசர காலத்தைப் பிரகடனம் செய்தது. அதற்கு பின்னர் அடுத்தடுத்து கம்யூனிஸ்ட்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. மலாயா கம்யூனிஸ்ட் கட்சி அதே ஆண்டு டிசம்பர் மாதம்தான் ஆயுதப் போராட்டத்தை பிரகடனம் செய்தது. அதுதான் உண்மை.”

பாசாங்கு செய்கின்றவர்களுடன் நாட்டின் வரலாறு குறிப்பாக அவசர காலம் தொடர்பான விஷயங்களில் இனவாத நோக்கங்களுக்காக சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு குவா அதனைத் தமது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

“ஜப்பானியர்கள் 100,000 மலாயா மக்களை கொன்றனர். ஆனால் நாம் ஜப்பானியர்களை மன்னிக்க முடியும். சக்கரவர்த்தி ஹிரோஹித்தோவையும் நாம் வரவேற்கத் தயாராக இருந்தோம். ஆனால் மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சின் பெங் தமது பெற்றோரின் கல்லறையில் அஞ்சலி செலுத்த வரக் கூடாது… ஆகவே அவசர காலத்தை அரசாங்கம் எதிர்கொள்ளும் முறையில் இனவாதம் தொனிக்கிறது”, என்றார் அவர்.

அண்மையில் எழுந்த புக்கிட் கெப்போங் சர்ச்சையிலும் அது மீண்டும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. 1950ம் ஆண்டு அந்த புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையம் மீது கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய முகமட் இந்ராவை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, சுதந்தரப் போராளி என பாராட்டியுள்ளார்.

“அண்மைய ஆண்டுகளாக ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் ஜின்ஸ் சம்சுதின் தயாரித்த புக்கிட் கெப்போங் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளியேறுகிறது. அதில் கிளர்ச்சிக்காரர்களுக்கு தலைமை தாங்கியதாக சொல்லப்படும் மாட் இந்ராவை நான் பார்க்க முடியவில்லை (திரைப்படத்தில்). நான் பார்த்தது எல்லாம் சீனர்களே,” என்றார் அவர்.

தேர்வு செய்யப்பட்ட வரலாற்றுச் சிதைவுகள்

உண்மையான சுதந்தரப் போராளிகள் என்னும் வாதம் அனல் பறக்கும் வேளையில் குவா, நாடு  காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததே இல்லை எனக் கூறும் தேசியப் பேராசிரியர்கள் மன்றத்துக்கும் சவால் விடுத்தார்.

“நாம் இந்த நாட்டில் வரலாற்றில் பிரச்னைகளைக் காண்கிறோம். அது நமது வரலாற்றில் அம்னோ ஆதிக்கம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வரலாற்றை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படும் ஆசிரியர்களும் பிரச்னையாக உள்ளனர். நாட்டு வரலாற்றுக்கு மடத்தனமாக விளக்கம் கொடுக்கும் சில பேராசிரியர்களும் நம்மிடையே உள்ளனர்”, என்றார் அவர்.

அந்தப் பேராசிரியர்கள் தனக்கள் கருத்துக்களை அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சஞ்சிகைகளில் வெளியிட வேண்டும் என்றும் குவா சவால் விடுத்தார். அவ்வாறு செய்தால் அவர்கள் உண்மையில் கேலிப் பொருளாகி விடுவர் என்றார் அவர்.

தேர்வு செய்யப்பட்ட வரலாற்றுச் சிதைவுகளையும் குவா எடுத்துரைத்தார். நாட்டின் அவசர காலம் குறித்து எழுதுமாறு கல்வியாளர் ஒருவரை அரசாங்கம் கடந்த காலத்தில் பணித்தது. ஆனால் அவர் எழுதியதை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

“மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய அந்தோனி ஷோர்ட் என்பவரை அவசர கால வரலாற்றை எழுதுவதற்கு மலேசிய அரசாங்கம் நியமித்தது. ஆனால் அவர் அதனை எழுதி முடித்ததும் அதனை அது நிராகரித்து விட்டது. அரசாங்கம் நியமித்த ஒருவர் வரலாறு மீது வழங்கிய அறிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது?”