ஹுடுட் சட்டம்: பக்காத்தான் தலைவர்கள் புதன் கிழமை விவாதிப்பர்

உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஹுடுட் பிரச்னை மீது எழுந்துள்ள அண்மைய சர்ச்சை பற்றி பக்காத்தான் தலைவர்கள் வரும் புதன் கிழமை தங்களது மாதக் கூட்டத்தில் விவாதிப்பர்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்தத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

அக்டோபர் 7ம் தேதி பிரதமர் அறிவிக்கும் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்தும் பக்காத்தான் முன் கூட்டியே வெளியிடும் அதன் வரவு செலவுத் திட்டம் பற்றியும் விவாதிக்கத் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஹுடுட் விஷயத்தையும் பக்காத்தான் தலைவர்கள் ஆராய்வர் என அவர் மேலும் சொன்னார்.

ஹுடுட் சர்ச்சை பற்றி விவாதிக்க பக்காத்தான் அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என டிஏபி புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளது பற்றி அன்வாரிடம் வினவப்பட்ட போது புதன் கிழமை ஹுடுட் விஷயம் விவாதிக்கப்படும் என அவர் பதில் அளித்தார்.

அந்த விவகாரம் மீது தமது கருத்தைத் தெரிவிப்பதற்கு கர்பாலுக்கு உரிமை இருப்பதாகவும் அன்வார் சொன்னார்.

புதன் கிழமை கூட்டத்தின் போது டிஏபி தலைவருடைய கருத்துக்கள் பற்றி அவருடன் விவாதிக்கப் போவதாகவும் பெர்மாத்தாங் பாவ் எம்பி-யுமான அவர் குறிப்பிட்டார்.

அந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான், ஹுடுட், இஸ்லாமிய சமயத்தில் ஒர் அங்கமாகும், அதனை அறிந்து கொள்வதும் விவாதிப்பதும் அனைத்து முஸ்லிம்களுடைய கடமை என்று சொன்னார்.

அந்த விஷயத்தை அரசியல் மயமாக்கக் கூடாது என்றும் விவாதப் பொருளாக மாற்றக் கூடாது என்றும் அவர் கூறினார். மாறாக அதனை விவரமாகவும் பொருத்தமான முறையிலும் விவாதிக்க வேண்டும் என்றார் அவர்.

இசா, போலி வாக்காளர்களின் போலி அடையாளக் கார்டுகள் போன்ற மிக முக்கியமான பிரச்னைகளை மறைப்பதற்காக அந்த விஷயத்தை ஊடகங்களில் பெரிதுபடுத்த பிஎன் அரசாங்கம் மட்டுமே விரும்புகிறது என நஸ்ருதின் கூறினார்.

பாஸ் கட்சியைப் பொறுத்த வரையில் இஸ்லாம் அதன் அடிப்படை இலட்சியமாகும். என்றாவது ஒரு நாள் ஹுடுட் அமலாக்கப்படுவதை காண முடியும் என அது நம்புகிறது. ஹுடுட், முஸ்லிம் அல்லாதாருக்குப் பாதகமாக இருக்கும் என்ற அச்சத்தையும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

“இது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டதாகும்,” என்றார் நஸ்ருதின்