அஸ்ரி: சமயத்தை அரசியல் பயன்படுத்துமானால் சமயச் சார்பற்றதாக இருப்பதே நல்லது

அரசியல் ஆதாயத்துக்காக சமயம் பயன்படுத்தப்படுமானால் சமயச் சார்பற்ற நாடு என்னும் கோட்பாடே சிறந்தது என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கூறுகிறார்.

சமயம் அரசியலுக்கு வழி காட்டுவதால் அரசியலும் சமயமும் கூட்டு சேரலாம். ஆனால் சமயம் அரசியல் ஆயுதமாக மாறினால் சமயச் சார்பற்ற நாட்டை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருப்பேன்.”

“சமயத்தையும் அரசியலையும் பிரித்து வைக்கும் நாட்டையே நான் விரும்புவேன். ஏனெனில் அரசியல் சமயத்தைப் பயன்படுத்தும் போது குறைந்த பட்சம் சமயம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அரசியல்வாதிகள் மோசமான சூழ்நிலையை எதிர்நோக்குவர்.

“மக்கள் தவறு செய்யும் போது அல்லாஹ்-வின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயலும் போது அவற்றைப் பிரித்து வைப்பதே நல்லது,” என அவர் நேற்று இஸ்லாமிய நீதிபரிபாலனம் பற்றிய மாநாட்டில் கூறினார்.

சமய ஆட்கள் சமயத்தை ஒர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முயலும் போது அவர்கள் ‘மோசமானவர்கள்’ என்னும் தோற்றத்தைப் பெறுவர்.

அரசாங்கம் தன் மூப்பாக இறைவன் பெயரைப் பயன்படுத்தினால் கால ஒட்டத்தில் இறைவன் கொடுமையானவராகத்  தோன்றுவார் என்றும் முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

“தவறுகளை இறைவன் ஏற்றுக் கொள்கிறார் என்ற தோற்றத்தையும் அது தந்து விடும். அதனால்தான் நாம் சமய பாத்வாக்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

‘அம்னோவின் பழைய கபீர் வாதம்’

பொதுத் தேர்தலில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிப்பது தொடர்பாக 1980களில் பாஸ் கூறிய வாதத்தை இப்போது பயன்படுத்தி வரும் ‘சில அம்னோ தலைவர்களையும்’ முகமட் அஸ்ரி சாடினார்.

பாஸ் அத்தகைய சிந்தனையைக் கைவிட்டு விட்ட போதிலும் முஸ்லிம் அல்லாதவருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது எனக் கூறும் அம்னோ தலைவர்கள் இன்னும் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“இதுதான் அம்னோவுக்குப் பிரச்னையே. முஸ்லிம்கள் கபீர்களுடன் (சமய நம்பிக்கையற்றவர்கள்) தொடர்பு வைத்துக் கொள்ளக் கூட்டது, அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற பாஸ் கட்சியின் 1980ம் ஆண்டுகளின் வாதத்தைப் பயன்படுத்தி பாஸ் கட்சியை விடத் தான் அதிகமான  இஸ்லாமியக் கட்சி என அம்னோ காட்டிக் கொள்ள முனைகிறது.”

“நான் தொடக்கப் பள்ளியில் படித்த காலத்திலிருந்து நான் இந்த வாதத்தை செவிமடுத்து வருகிறேன். அது போன்ற விஷயங்களை பாஸ் கூட இப்போது பேசுவதில்லை. ஆனாம் முஸ்லிம் அல்லாதவருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது என அம்னோ சொல்கிறது.”

“நான் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவில்லை. ஆனால் அது இப்போது உண்மையென மற்றவர்களுக்குச் சொன்னால், நீங்கள் உங்களுக்கே உண்மையாக நடந்து கொள்ளவில்லை என அர்த்தம். அது வினோதமாக இருக்கிறது,” என்றும் முகமட் அஸ்ரி குறிப்பிட்டார். பிஎன் -னில் அங்கம் பெற்றுள்ள முஸ்லிம் அல்லாத கட்சிகளையே அவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

அத்தகைய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திய முகமட் அஸ்ரி சமூகத்துக்கு நன்மை அளிக்கக் கூடிய வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பற்றிக் கருத்துரைத்த அவர், ஆர்ப்பாட்டங்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார். என்றாலும் அவை சில விதிமுறைகளுக்கு உட்பட்டவை.

“ஜனநாயக அரசாங்கத்துக்காக மக்கள் ஒன்று கூடலாம். ஆனால் அவர்கள் வன்முறையில் இறங்கக் கூடாது. சொத்துக்களை நாசம் செய்யக் கூடாது. தாங்கள் சிரமம் எனக் கருதும் மாற்றத்தை வலியுறுத்துவதே அவர்கள் கூடுவதின் நோக்கமாகும்.”

“அதனால்தான், மக்கள் ஒன்று கூட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என நான் சொல்கிறேன். அவர்களுக்கு தண்ணீரும் ரொட்டியும் கொடுங்கள். எல்லோரும் சந்தோஷப்படுவர்.”

“என்ன பிரச்னை ? கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீச வேண்டிய அவசியம் என்ன  ? ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினால் மட்டும் அவற்றை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் மேலும் பிரச்னைகள்தான் எழும்,” என்றார் முகமட் அஸ்ரி.