தூய்மையான, நியாயமான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி இன்று பிற்பகல் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோலாலம்பூரில் உள்ள ஜாமெய்க் பள்ளிவாசலில் ஒன்று திரண்டனர்.
பிற்பகல் மணி 2.30 வாக்கில் மாணவர்கள் அந்தப் பள்ளிவாசலிலிருந்து டாத்தாரான் மெர்தேக்காவை நோக்கி ஊர்வலமாகச் சென்று பின்னர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள சோகோ கடைத் தொகுதியை நோக்கி நகர்ந்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சதுக்கத்தின் ஜாலான் பார்லிமென், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சந்திப்புக்களில் மாணவர்கள் சிறிது நேரம் நின்று நெகாராக் கூ-வை பாடினர். பின்னர் சோகோ-வை நோக்கி ஊர்வலத்தைத் தொடர்ந்தனர்.
அவர்கள் தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் “வெளிப்படையான தேர்தல்கள்”, “வேட்பாளர்களுக்கு நிதிகளை ஒதுக்குங்கள்” “தேர்தல் தேதிகளை நிர்ணயம் செய்யுங்கள்” எனக் கேட்டுக் கொள்ளும் பதாதைகளையும் வைத்திருந்தனர்.
அந்த மாணவர்கள் ஊர்வலமாகச் சென்ற வேளையில் “மாணவர்களே எழுச்சி பெறுங்கள்”, “மோசடியை நிராகரியுங்கள்” என்ற அர்த்தத்தைக் கொண்ட வாசகங்களையும் முழங்கினர். மாணவர் ஆதரவுச் சின்னமான ‘Mat Gempa’-ம் அங்கு காணப்பட்டது.
டாத்தாரான் மெர்தேக்காவிலும் ஜாமெய்க் பள்ளிவாசலிலும் போலீஸ்காரர்கள் காணப்பட்டனர். அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என போலீஸ்காரர்கள் மாணவர்களுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் அந்தப் பேரணியில் தலையிடவே இல்லை.
அடுத்த வாரம் பல்கலைக்கழகத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்குத் தேதி அதுவும் கடைசி நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அந்த அறிவிப்பை பல தரப்புக்கள் குறை கூறியுள்ளன. பல்கலைக்கழகத் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அரசாங்கம் முயலுகிறதா என்று கூட சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே 2.0 அமைப்பு கூட அதனைக் கண்டித்துள்ளது.