லிம் குவான் எங்: பெர்னாமா மன்னிப்பு கேட்க வேண்டும்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ‘தவறான செய்திகளையும் பொய்களையும்’ பரப்பியதற்காக பெர்னாமா நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கேட்பதுடன் அந்தச் செய்தியையும் மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை அது எதிர்நோக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

செப்டம்பர் 20ம் தேதி ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லிம். பினாங்குடன் ஒப்பிடுகையில் ஜோகூர் பாதுகாப்பான மாநிலம் இல்லை என்றும் அங்கு கடத்தப்படும் வாய்ப்புக்கள் கூடுதல் என்றும்  கூறியதாக அந்தச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அவ்வாறு தாம் சொன்னதாக கூறப்படுவதை முற்றாக மறுத்த லிம் அதற்கு ஆதரவான சாட்சிகளும் இருப்பதாக தெரிவித்தார்.

புண்படுத்தும் அந்தத் தகவல்களை செப்டம்பர் 23ம் தேதி பெர்னாமா வெளியிட்டதாக தமது பத்திரிக்கை செயலாளர் (ll) வோங் கிம் பெய் வழி பெர்னாமா தலைமை ஆசிரியர் யோங் சூ ஹியோங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் லிம் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தகவல்கள் “Lim Guan Eng should not sabotage other states – Muhyiddin”, “Lim Guan Eng tidak sepatutnya sabotaj negeri lain – Muhyiddin” ( மற்ற மாநிலங்களை லிம் குவான் எங் கீழறுப்புச் செய்யக் கூடாது )என்னும் தலைப்புக்களில் வெளியிடப்பட்டன..

செப்டம்பர் 20ம் தேதி ரேடியோ ஆஸ்திரேலியாவுக்காக காமெரன் வில்சன் என்பவர் லிம்-மைப்  பேட்டி கண்டதாக வோங் விளக்கினார்.

ஆஸிய பஸிபிக் வட்டாரம் மீது கூடுதல் கவனம் செலுத்தும் அந்த வானொலி எட்டும் மொழிகளில் ஒலிபரப்பாகிறது.  அது ஆஸ்திரேலிய தேசிய ஒலிபரப்பு நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்தின் அனைத்துலக வானொலியும் இணைய வானொலியுமாகும்.

அடைக்கலம் நாடுவோர் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச்  செய்யப்படுவது, பினாங்கு ஆகியவை பற்றி மட்டுமே பேட்டியின் போது லிம்-மிடம் வினவப்பட்டது.

அவர் எந்த நேரத்திலும் ஜோகூர் பற்றியோ மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலைமை பற்றியோ பேசவில்லை என்றும் வோங் சொன்னார்.

“உங்களுடைய தவறான தகவல்களும் பொய்களும் ஜோகூரை கீழறுப்புச் செய்வதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் உட்பட அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் கடுமையாக லிம்-மைத் தாக்குவதற்கு வழி வகுத்து விட்டது,” என்றும் வோங் சொன்னார்.