ஜிஎஸ்டி என அழைக்கப்படும் பொருள், சேவை வரியை அமலாக்குவதற்கு அரசாங்கம் விரும்பினால் அதனைச் செய்வதற்கு அரச மலேசிய சுங்கத் துறை தயாராக இருக்கிறது.
அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் கசாலி அகமட் இன்று தாவாவ்-வில் வெளியிட்டார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை உருவாக்கும் பொறுப்பு சுங்கத் துறைக்கு வழங்கப்படும் என்பதால் அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுவது முக்கியம் என அவர் சொன்னார்.
“நாங்கள் ஊழியர்கள் அடிப்படையிலும் பயன்படுத்தப்படும் முறையிலும் தயாராக இருக்க வேண்டும்,” என அவர் சபா சுங்கத் துறை திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் கசாலி நிருபர்களிடம் பேசினார்.
அந்த நிகழ்வில் சபா சுங்க இயக்குநர் டாக்டர் ஜோனாதான் கண்டோக்-கும் கலந்து கொண்டிருந்தார்.
சுங்க அதிகாரிகளுக்கு பயிற்சியும் அது தொடர்பான வகுப்புக்களும் நடத்தப்படுவதுடன் ஜிஎஸ்டி-யுடன் சம்பந்தப்படும் பொது மக்களுக்கும் வணிகர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சிகளும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி முறை அமலாக்கப்படும் போது பயன்படுத்தப்படுவதற்காக பொருத்தமான கணினி முறையையும் சுங்கத் துறை உருவாக்கி வருகின்றது என்றும் கசாலி சொன்னார்.
இவ்வாண்டு செப்டம்பர் 17ம் தேதி வரையில் தமது துறை 22.5 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை திரட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் தொகை கடந்த ஆண்டு அதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட 6.69 விழுக்காடு அதிகம் என்றார்.
பொருளாதார வளர்ச்சியும் சுங்க வருமானம் கூடியதற்கான காரணங்களில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரி செலுத்துவோரின் கடப்பாடு குறித்து குறிப்பிட்ட கசாலி, பலர் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தி விடுவதாகவும் சிலர் மட்டுமே அதனைப் பின்பற்றுவதில்லை என்றும் சொன்னார்.
பெர்னாமா