வெளிநாட்டு நிதியுதவி நாட்டின் சுதந்திரத்திலும் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் உள்துறை அமைச்சு அதை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று அதன் அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
2005இலிருந்து மலேசியாவின் பல்வேறு என்ஜிஓ-கள் கிட்டதட்ட ரிம20மில்லியன் வெளிநாட்டு உதவியைப் பெற்றிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பற்றி ஹிஷாமுடின் கருத்துரைத்தார்.
“அவ்விவகாரம் சட்டத்துறைத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்களை மலேசிய நிறுவனங்கள் ஆணையம் வழங்கி வருகிறது.
“நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எங்களின் பொறுப்பும் முன்னுரிமையாகும்.எனவேதான், அந்நிய நிதிகள் உள்ளே வருவதையும் போவதையும் சில தலைவர்களின் பயணங்களையும் நீண்டகாலமாகவே கவனித்து வருகிறோம்.இது நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விசயம்.இதுவே அமைச்சின் மிக முக்கியமான பொறுப்புமாகும்”, என்றாரவர்.
முன்னதாக, ஹிஷாமுடின் போலீஸ், சிவில் தற்காப்பு மாணவர் தொண்டர்படைத் தலைவர்களைச் சந்தித்து பேசினார். அவர்கள், அமைச்சு இளைஞர்களுக்காகக் கொண்டுள்ள குறிக்கோள்கள், திட்டங்கள் பற்றி விவாதித்தனர்.
நாட்டில் இப்போதுள்ள இளைஞர்களில் பெரும்பாலோர் வெறுப்பூட்டும் அரசியலால் எரிச்சலடைந்திருக்கிறார்கள் என்றும் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க விரும்பும் அவர்கள் அதற்கு உதவும் ஆக்ககரமான திட்டங்களைத் தேடுகிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“சில திட்டங்களைத் தொடங்கலாம் என்று அவர்களே ஆலோசனையும் தெரிவித்தார்கள். அத்திட்டங்கள் நேரம் வரும்போது அறிவிக்கப்படும்”, என்றார்.
– Bernama