FGV பங்கு விலைகள் தொடர்ந்து விழுந்தால் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும்

FGV என்ற Felda Global Ventures பங்கு விலை நான்கு ரிங்கிட்டுக்கு கீழே விழுந்தால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அனாக் எனப்படும் Persatuan Anak Peneroka Felda அமைப்பு மருட்டியுள்ளது.

“4 ரிங்கிட்டுக்கும் குறைவாக அதன் பங்கு விலை சரியுமானால் ஆரஞ்சுப் பேரணியைக் காட்டிலும் பெரிதாக ஆர்ப்பாட்டத்துக்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம்,” என அனாக் அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் கூறினார்.

அந்த FGV நிறுவனத்தின் பங்குகள் மேலும் சரியாமல் தடுக்க மீட்புத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு அரசாங்கத்தை நெருக்குவதே அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என அவர் நிருபர்களிடம் கூறினார்.

நேற்று பங்குப் பரிவர்த்தனை முடிவடைந்த போது FGV பங்கு விலை 4 ரிங்கிட் 90 சென்-ஆக இருந்தது. கடந்த ஜுலை மாதம் அதன் விலை 5.50 சென் -ஆக இருந்தது.

கடந்த செவ்வாய்க் கிழமை அதன் விலை 4 ரிங்கிட் 57 சென் -ஆக இருந்தது. அது, FGV பங்குகள் வெளியிடப்பட்ட போது இருந்த 4 ரிங்கிட் 55 சென் -னை விட இரண்டு சென் மட்டுமே கூடுதலாகும்.

ஆனால் அது மீண்டும் ஏற்றம் கண்டது. அதற்கு இபிஎப் என்ற ஊழியர் சேம நிதி வாரியம் FGV நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கியது காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இபிஎப் அந்த நிறுவனத்தில் தனது பங்கு முதலீட்டை 5.4 விழுக்காட்டிலிருந்து 6.98 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

FGV பங்குப் பரிவர்த்தனைச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை ஆட்சேபித்து ஜுலை மாதம் 14ம்

தேதி நடத்தப்பட்ட ஆரஞ்சுப் பேரணியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.