பினாங்கு முதலமைச்சர் தாம் குடியிருக்கும் வீட்டின் வாடகை ஒப்பந்தத்தை வெளியிடுகிறார்

ஜார்ஜ் டவுனில் தாம் வசிக்கும் தனியார் வீடு குறித்து விளக்குமாறு மாநில பிஎன் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை முதலமைச்சர் லிம் குவான் எங் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜாலான் பின்ஹோர்னில் உள்ள அந்த வீட்டுக்கு நிதி அளிப்பதற்காக பொது நிதிகள் விரயம் செய்யப்படுவதாக பிஎன் தொடர்ந்து தாக்கிப் பேசி வந்ததைத் தொடர்ந்து லிம் அந்த வீட்டுக்கான வாடகை ஒப்பந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

டிஏபி எதிர்ப்பு பிரச்சார டிவிடி-யிலும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.  அண்மையில் அந்த டிவிடி-க்கள் பரவலாக விநியோகம் செய்யப்பட்டன.

டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் அந்த ஆவணங்களை தமது அரசியல் செயலாளர் இங் வெய் எய்க் வழி வெளியிட்டார்.

ஜாலான் மெக்காலிஸ்டரில் ஸ்ரீ தெராத்தாய் என அழைக்கப்படும் தமது அதிகாரத்துவ இல்லம் ‘மிகவும் மோசமான நிலையில் கறையான் அரித்த நிலையில்” இருந்ததைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு லிம் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தததாக கொம்தார் சட்டமன்ற உறுப்பினருமான இங் சொன்னார்.

அந்த நேரத்தில் முதலமைச்சர் இல்லத்தை பழுது பார்ப்பதற்கு 500,000 ரிங்கிட்டுக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இன்று அது இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றார் இங்.

செலவுகளைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ தெராத்தாயை பழுது பார்க்கும் யோசனையை லிம் மறுபரிசீலினை செய்ததாக அவர் மேலும் சொன்னார்.

“மலேசியாவில் தாம் குடியிருப்பதற்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்தது குறித்து  கேள்வி எழுப்பப்பட்டுள்ள ஒரே ஒரு முதலமைச்சர் அல்லது மந்திரி புசாராக லிம் மட்டுமே இருக்க முடியும்,” என இங் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“பிஎன் தலைவர்கள் அரண்மனைகளைப் போன்று வீடுகளை வாங்கினாலும் விளக்க வேண்டிய தேவை இல்லை. எடுத்துக்காட்டுக்கு முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோவுக்குச் சொந்தமான வீட்டைக் கூறலாம்,” என்றார் அவர்.

“பக்காத்தான் ராக்யாட்டைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் வீட்டை வாடகைக்கு எடுப்பது கூட தவறு எனத் தோன்றுகிறது,” என இங் புன்னகையுடன் கூறினார்.

வீட்டு உரிமையாளர் விவரம் இல்லை

ஆறு பக்கங்களைக் கொண்ட அந்த ஒப்பந்தத்தில் வீட்டு உரிமையாளரது பெயர் (பெண்) மீது கறுப்பு மை பூசப்பட்டுள்ளது. அது தனிப்பட்ட ஒப்பந்தம் என்பதால் சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயரை வெளியிட முடியாது என இங் சொன்னார்.

அந்த வீட்டு உரிமையாளருடன் லிம்-முக்கு உள்ள உறவுகள் பற்றியும் மாநில பிஎன் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அதன் விவரங்களை நில அலுவலகத்திலிருந்து பெறலாம் என இங் தெரிவித்தார்.

லிம் அந்த வீட்டுக்கு மாதம் ஒன்றுக்கு 5,000 ரிங்கி வாடகை செலுத்துகிறார். அந்தத் தொகை முதலமைச்சர் என்ற முறையில் அவருக்குக் கிடைக்கும் வீட்டு அலவன்ஸை விட 1,000 ரிங்கிட் கூடுதலாகும். அந்த வீடு முழு தளவாட வசதிகளைக் கொண்டதாகும். ஆனால் நீச்சல் குளம் இல்லை.

முன்னாள் முதலமைச்சர் கோ சூ கூன் -க்கு வழங்கப்பட்ட அதே 4,000 ரிங்கிட் தான் லிம்-முக்கும் வீட்டு அலவன்ஸாக கொடுக்கப்பட்டுகின்றது என்றும் இங் தெரிவித்தார்.

அந்த வீட்டைப் புதுப்பிப்பதற்கு 1.5 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ளதாக கெரக்கான் கூறிக் கொள்வது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த இங், அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார்.

“அது வீட்டு உரிமையாளர் சம்பந்தப்பட்டதாகும். எங்களுக்குத் தெரியாது. லிம் அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு முன்னர் அது செய்யப்பட்டது.”

அந்த வாடகை ஒப்பந்தம் இப்போது காலாவதியாகி விட்டது. பிஎன் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் வாடகை ஒப்பந்தத்தை நீட்டிப்பதா இல்லையா என்பது பற்றி வீட்டு உரிமையாளர் இன்னும் பரிசீலித்து வருகிறார் என்றும் இங் சொன்னார்.

லிம் வீடு மீது எம்ஏசிசி-யிடம் புகார்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கெரக்கான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ( எம்ஏசிசி ) அந்த விவகாரம் மீது புகார் செய்துள்ளது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.

“அந்த வீடு லிம்-முக்குச் சொந்தமானது என்று கூட அவர்கள் கூறிக் கொண்டனர். அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிப்பதற்காக நாங்கள் இன்று லிம்-முக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளோம்,” என மாநில டிஏபி இளைஞர் தலைவருமான இங் சொன்னார்.

அந்த வாடகை ஒப்பந்த விவரங்களை வெளியிடுமாறு லிம்-முக்கு நிபோங் தெபால் எம்பி தான் தீ பெங் விடுத்த சவால் விடுத்திருந்தார்.